சொர்க்க பூமியில் மிதக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" தண்ணீா் கோயில் !

சொர்க்க பூமியில் மிதக்கும் "அர்த்தநாரீஸ்வரர்" தண்ணீா் கோயில் !
"கடவுளின் சொர்க்க பூமி" (God's Own Country) என்ற புகழ்பெற்ற இந்திய மாநிலம் கேரளாவிலும் அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோவிலில்.
மலைக்கோயில், குகை கோயில் ,பாதாள கோயில், குடைவரைக்கோயில் மற்றும் காட்டுக்குள் கோயில் என இப்படி இந்து மதத்தில் மக்கள் வழிபாடு செய்யும் கோயில் திருத்தலங்கள் பல சூழ்நிலைகளால் அமைந்திருக்கும்.
ஆனால் நாம் பார்க்க இருக்கும் இந்தக் கோவிலில் தண்ணீர் சூழ்ந்திருக்கும் தண்ணீர் கோவில். என்னது, தண்ணீர் கோவிலா? ஆமாங்க, சிவனும் சக்தியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக இங்கு காட்சி தருகிறார்கள். 365 நாட்களும் முழுவதும், கோவில் பிரகாரம் முதல் கோவில் கருவறை வரை சுமார் "2 1/2 அடி ஆழம்" தண்ணீர் சூழ்ந்து இருக்கும். மேலும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க தண்ணீருக்குள் இறங்கி மெதுவாக ஊர்ந்து, நகர்ந்து ,மெல்ல மெல்ல நடந்து சென்று வர வேண்டும் என்பதால் இந்தக் கோவிலைத் தண்ணீர் கோவில் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.
சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்து இரண்டு கற்கள் மூலம் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலையை உருவாக்கியுள்ளனர் . மேலும் இந்தக் கோயிலில் இருக்கும் பிரதான தெய்வத்தின் சிலை இங்கேயே சுயம்புவாக தோன்றியதாக நம்பப்படுகிறது.
தெய்வம் தண்ணீரில் 'இருப்பதால்', கோயிலின் தெற்குப் பகுதியில் 'நைவேத்தியம்' மற்றும் பிற பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி விழாவின் போது, தண்ணீர் வெளியேற்றப்பட்டு, நள்ளிரவில் சிலைக்கு 'அபிஷேகம்' செய்யப்படுகிறது.
முன்பு ஒரு காலத்தில் கோயில் அருகே அமைந்துள்ள ' வெளிகொண்டு ' என்ற ஒரு மலையின் உச்சியில் ஒரு யோகி தியானம் செய்து கொண்டிருந்தபோது, நீரில் சிவன் மற்றும் பார்வதியின் இருப்பை வெளிப்படுத்தினார். பின்னர், பக்தர்கள் சிவனும் பார்வதியும் இருந்த இடத்தில் 'அர்த்தநாரீஸ்வரர்' என்ற நம்பிக்கையின் கீழ் பிரார்த்தனை செய்தனர், அதாவது பாதி ஆண் பாதி பெண் சிவனையும் பார்வதியையும் சித்தரிக்கும். இந்த இடம் 'வெளிகொண்டு' மலை என்றும் அறியப்படுகிறது.
இந்த தனித்துவமான அர்த்தநாரீஸ்வர கோயில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரேரிந்தல்மன்னா தாலுகாவில், அரக்குபரம்பா கிராமத்தில் உள்ள வெளிகொண்டுவில் அமைந்துள்ளது. கருவறை, 'நமஸ்கார மண்டபம்' மற்றும் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றி தண்ணீரில் உள்ளன என்பதே இந்த கோயிலின் தனித்துவம்.
கோயிலின் சிறப்பு நாட்கள் சிவராத்திரி, சிலை பிரதிஷ்டை தொடர்பாக நடத்தப்படும் திருவிழா, மலையாள மாதம் 'தனு' (டிசம்பர்-ஜனவரி) 'மகம்' நட்சத்திரத்தில் தொடங்கும்.வருடாந்திர திருவிழா மற்றும் ஐந்தாம் நாளில் 'திருஆராட்டு' திருவிழா, மற்றும் 'தனு' மாதத்தில் நடைபெறும் திருவிழா மூன்று நாள் நடத்தப்படுகிறது.
'மகம்' நட்சத்திர நாளில், 1008 தண்ணீர் தொட்டிகளில் தெய்வத்திற்கு 'அபிஷேகம்' செய்யப்படுகிறது. சரியான மணமகன் அல்லது மணமகளைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்பவர்களுக்கு கோவிலில் உமாமஹேஸ்வர பூஜை நடத்தப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் பச்சை போர்வை போர்த்தியதுபோல் காட்சி தரும் இந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள கருவறை, 'நமஸ்கார மண்டபம்', 'அஷ்டதிக்பாலகர்கள்', சுற்றி வருவதற்கான பாதை மற்றும் கேரளாவின் கட்டிடக்கலை,வெட்டுக்கல்லால் ஆன சுற்றுச்சுவர் ஆகியவை என மொத்த கோவிலும் தண்ணீரில் இருப்பதாலும் இங்கு நிலவும் அமைதியான மற்றும் அற்புதமான சூழல் கண்களுக்குக் குளிர்ச்சியளித்து மனதிற்கும் விருந்தளித்து பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் மயங்கிப் போவார்கள்.