விண்வெளிக்கு செல்லும் ஏஐ ரோபோ….இஸ்ரோ வெளியிட்ட தகவல்!
ஆளில்லாத விண் ஏவூர்தி

விண்வெளிக்கு செல்லும் ஏஐ ரோபோ….இஸ்ரோ வெளியிட்ட தகவல்!
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் எனவும் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லாத விண் ஏவூர்தி அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதில் வயோமித்ரா என்ற எந்திர மனிதரை அனுப்ப உள்ளோம். டிசம்பர் மாதம் இறுதியில் அது நடைபெறும்.
இது முடிந்தவுடன் இரண்டு ஆளில்லா ராக்கெட்களை அனுப்ப உள்ளோம். 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மனிதர்களை அனுப்பவுள்ளோம்.
மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள் அங்கு மூன்று நாள்கள் தங்கி, பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வா். பின்னா், மீண்டும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்புவாா்கள்.
இதன்மூலம், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்குப் பிறகு சொந்த விண்கலத்தில் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பிய உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவாகும்.
விண்வெளிக்கு ஆள்களைக் கொண்டு செல்லும் ராக்கெட் திட்டத்தின் முதல் கட்டமாக, ககன்யான் ஜி1 என்னும் ராக்கெட்டை ரோபோடிக் உதவியுடன் டிசம்பரில் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது ராக்கெட்டில் செல்லும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரா்களை பத்திரமாக மீட்டு வருவது, ஆய்வு முடிந்து கடலில் தரை இறங்கும் பாராசூட் தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் ஆய்வுகளும், மாதிரி ஒத்திகைகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.