புரட்டாசி மாதம் புண்ணிய மாதம்..,அதுவும் சனிக்கிழமை விரதம் புண்ணியத்தை இரட்டிப்பாக்கும்!

எண்ணியது நிறைவேறும் இனிய மாதம்

Sep 19, 2025 - 16:05
 279
புரட்டாசி மாதம் புண்ணிய மாதம்..,அதுவும் சனிக்கிழமை விரதம் புண்ணியத்தை இரட்டிப்பாக்கும்!

புரட்டாசி மாதம் புண்ணிய மாதம்..,அதுவும் சனிக்கிழமை விரதம் புண்ணியத்தை இரட்டிப்பாக்கும்!

புரட்டாசி மாதம் புண்ணிய மாதம் என்பார்கள். எண்ணியது நிறைவேறும் இனிய மாதம். விரதங்கள் நிறைந்த அற்புத மாதம். புரட்டாசி மாதத்தின் அதிதேவதையாக உள்ளவர் இருடீகேசன். பெரியாழ்வார் விஷ்ணுவை இருடீகேசன் என்று போற்றும் பாசுரம் இது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

இந்த புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷமான நாள்கள். புரட்டாசி மாதம் முழுவதும் ஒருபொழுது விரதம் இருப்பவர்கள் உண்டு. அப்படி இல்லாதவர்கள் கூட, சனிக்கிழமை மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது உண்டு.

அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட, பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதத்தை விலக்கி விடுவார்கள்.புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர, அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உண்டு.

திருமலை யாத்திரை மேற்கொள்பவர்கள், குடும்பத்தோடும் உறவினர்களோடும், விரதம் இருந்து, மேளதாளத்தோடு ஊர்வலம் வந்து, தளியல் எனப்படும் அமுது படையல் செய்து, அதை ததீயாராதனமாக நடத்தி, யாத்திரை மேற்கொள்வது உண்டு.

தளிகை என்றால் படையல் என்பதாகும்.தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றது. தேங்காய் சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் ,புளியோதரை போன்ற சாதங்களும், உளுந்துவடை, சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவை தளிகையில் வைக்கப்படுகின்றது.

ஐந்து விதமான சாதங்களை பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

வாழை இலையில் ஐந்து விதமான சாதத்தால் திருமாலின் திரு உருவப் படத்தை வரைந்து தீப தூப ஆராதனை இட்டு கோவிந்தா என கோஷமிட்டு வழிபடுவதாகும்.

தளிகையின்போது மாவிளக்கு வைத்து வழிபாடுகளை செய்யலாம். தயிர் சாதம் முக்கியம். அதனால்தான் இன்றளவும் திருமலையில் ஏழுமலையானுக்கு மண் பானையில் தயிர் சாதம் நெய்வேத்தியமாகப் படைக்கப்படுகிறது.

அன்றைக்கு யாரேனும் அகதிகள் வந்தாலோ, விருந்தினர்கள் வந்தாலோ, அவர்களுக்கு உணவளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும்.

இப்பொழுது பாதயாத்திரை இல்லாவிட்டாலும், நிறைய பேர் புரட்டாசி மாதம் முழுக்க திருமலைக்குச் சென்று திருவேங்கடவனை தரிசித்து வருவதில் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். திருப்பதிக்குச் சென்று திரும்பிவந்தால் ஒரு திருப்பம் நேரும் அல்லவா.

சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்ய காரியத்தடைகள் விலகும். காரியம் சித்தி தரும்.

சனி தோஷங்களான அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, கண்டச்சனி, அர்தாஷ்டமச்சனி முதலிய தோஷங்களும், சனி திசா புத்தி தீய விளைவுகளும் அகலும். அன்றைய நாளில் நாம் திருவேங்கடமுடையானை மனதார வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளை விண்ணப்பித்தால் கண்டிப்பாக பெருமாள் சகல காரியங்களிலும் நம்மை வெற்றி அடையச் செய்வார்.