மறைந்த ரோபோ சங்கருக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

மறைந்த ரோபோ சங்கருக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி!
மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு இன்று பிற்பகலில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர், தீபாவளி திரைப்படத்தில் மூலம் வெள்ளித் திரை உலகில் இணைந்தார். மாரி, விஸ்வாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ரோபோ சங்கர்.
அவருக்கு வயது 46. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தவெக தலைவர் விஜய்;
நண்பர் ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நடிகர் மநீம தலைவர் கமல்ஹாசன்;
ரோபோ சங்கர். ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்;
நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்;
சின்னத் திரையிலிருந்து வளர்ந்து, தமிழ்ச் சினிமாவில் தனது தனித்துவமிக்க நகைச்சுவை திறன் மூலமாகவும், குணச்சித்திர வேடங்களின் மூலமாகவும் புகழ்பெற்ற நடிகராகத் திகழ்ந்த நடிகர் 'ரோபோ' சங்கர் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் வாடுகின்ற அவரது குடும்பத்தார் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;
தனது நகைச்சுவைத் திறனால், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இடம்பிடித்த திரைக் கலைஞர், ரோபோ சங்கர் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.