ட்ரம்ப்புக்கான நோபல் பரிசு அறிவிப்பு?
நோபல் பரிசு அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

ட்ரம்ப்புக்கான நோபல் பரிசு அறிவிப்பு?
உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அக்டோபர் 10 வெளியாக உள்ள அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 6ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்றைய தினம் அறிவிக்கப்பட இருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி உலக அமைதிக்காக பாடுபட்ட நபர்களை தேர்ந்தெடுத்து தான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு என்பது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே, “இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – ஹமாஸ் போர் உட்பட உலகம் முழுவதும் எட்டு போர்களை நிறுத்தியுள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு நான் தான் பொருத்தமானவன், எனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடபாக நார்வே நோபல் கமிட்டிக்கும் அவர் வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அவருக்கு நோபல் பரிசு வழங்கக்கோரி பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு உள்ளிட்டோர் நேரிடையாகவே நோபல் கமிட்டிக்கு பரிந்துரைத்துள்ளனர். சமீபத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்தியதற்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் டிரம்பை பாராட்டி வருகின்றனர்.
எனினும் நோபல் கமிட்டியை சேர்ந்தவர்கள், ஆஃல்பிரெட் நோபல் அவர்களின் உயிலில் குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்றி தான் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுவது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில் அதையும் தாண்டி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா? அவருக்கு கிடைக்கவில்லையென்றால் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.