அனில் அம்பானி உதவியாளர் கைது…. அமலாக்கத்துறை நடவடிக்கை!

வங்கியில் போலி உத்திரவாதம் கொடுத்த விவகாரம்

Oct 11, 2025 - 16:13
 6
அனில் அம்பானி உதவியாளர் கைது…. அமலாக்கத்துறை நடவடிக்கை!

அனில் அம்பானி உதவியாளர் கைது…. அமலாக்கத்துறை நடவடிக்கை!  

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் அனில் அம்பானிக்கு நெருக்கமானவருமான அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

வங்கியில் போலி உத்திரவாதம் கொடுத்த விவகாரத்தில் இந்த கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அனில் அம்பானிக்கு எதிரான வழக்குகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது அவருக்கு கடும் நெருக்கடியாக அமைந்துள்ளது.

 

அனில் அம்பானி யார்?

 

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் உடன் பிறந்த சகோதரர் அனில் அம்பானி.

இவர் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக இருந்த இவர் ஏராளமான தொழில்களை செய்து வந்தார். அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.

குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்கி செலுத்தாதது, கடன் வாங்கி முறைகேடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அனில் அம்பானி மீது உள்ளன. இது தொடர்பாக சி.பி.. சார்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கடந்த ஜூலை 24ஆம் தேதி அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.  

டெல்லி, மும்பையில் உள்ள அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள், அதன் துணை நிறுவனங்கள் என்று 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மொத்தம் 50 நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களின் தலைவரான அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3,000 கோடி கடனை அனில் அம்பானி பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதோடு இதுபற்றி விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அனில் அம்பானி மீது விசாரணை நடைபெற்றது.

அனில் அம்பானியின் உதவியாளர் கைது:

இந்த நிலையில், அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. போலி உத்தரவாதம் கொடுத்த வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனில் அம்பானிக்கு எதிரான முறைகேடு புகார்களை அமலாக்கத்துறை விரிவுபடுத்தியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.