வரலாற்றை மாற்றிய பாஜக! தேசிய அளவில் கவனம் பெற்றது!
நீண்ட கால முயற்சிக்கு பிறகு கேரளாவில் பாஜக கால் பதித்துள்ளது.
பாஜகவால் கால் ஊன்றவே முடியாது என கருதப்பட்ட கேரளாவில் தனியொறு மக்களவை எம்.பியாக சுரேஷ் கோபி உருவெடுத்துள்ளது தேசிய அளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தென் மாநிலமான கேரளா 20 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளதோடு, இடதுசாரிகளின் கோட்டையாகயும் பார்க்கப்படுகிறது.
அதாவது நாடாளுமன்ற தேர்தல்களில் இதுவரை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டுமே மாறி மாறி ஆட்சியை கைப்பற்றி வந்தன.
இந்த நிலையில் கடந்த 17 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாஜக தோல்வியை மட்டுமே கைவசம் வைத்திருந்தது. இதனால் கேரளாவில் எப்படியாவது பாஜக வெற்றியை சந்தித்தாக வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வந்தது. அதில், முக்கிய பிரபலங்களை வேட்பாளர்களாக நிறுத்துவது, கேரள பாஜகவிற்கு ஆளுநர் போன்ற முக்கிய பதவிகளை அளிப்பது என கேரளாவில் தாமரையை மலர செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த முரளிதரனை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்து அவரை மத்திய அமைச்சராகவும் ஆக்கி பலனில்லை என்றே கூறப்படுகிறது. அதே போல், ஏற்கனவே ஓ.ராஜகோபால் என்பவரை ராஜ்யசபா எம்.பி யாக்கி மத்திய அமைச்சராக கேரளாவில் வலம் வர செய்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து எம்.பியாக்க முயற்சித்ததும் தோல்வியில் முடிவடைந்தது. இதே போல கேரள மாநில பாஜக தலைவராக இருந்த குமணம் ராஜசேகரனை மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக்கி பின்னர் அங்கிருந்து வரவழைத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட செய்து எம்.பியாக்க முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
இப்படி தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற முடியாமலேயே இருந்த பாஜக 2024 பாராளுமன்ற தேர்தலில் சுரேஷ் கோபியை முன்னிருத்தி அரசியல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டியது. மலையாளத்தில் முன்னனி நடிகராக வலம் வரும் சுரேஷ் கோபி தமிழிலும் ஐ, தீனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மக்களிடம் பிரபலமான இவரை வைத்து அரசியல் காய்களை பாஜக நகர்த்தியது. அதன் படி 2019ம் தேர்தலில் திருச்சூரில் களம் இறங்கிய சுரேஷ் கோபிக்கு தோல்வியே மிஞ்சியது. சட்டமன்ற தேர்தலில் திருச்சூரில் தோல்வியையே சந்தித்து வந்த அவர் மீண்டும் அதே தொகுதியிலேயே தனது இருப்பிடத்தையுமே மாற்றி தனது கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
பூத் கமிட்டி நிர்வாகிகளை உத்வேகப்படுத்தியது, கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சென்று வழிபடுவது, திருச்சூரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் நட்பு பாராட்டுவது என முழு நேர அரசியல்வாதியாக வலம் வந்தார் சுரேஷ் கோபி.
தற்போது 74 ஆயிரத்து 686 வாக்கு வித்தியாசத்தில் இடதுசாரியை பின்னுக்கு தள்ளி 4லட்சத்து 12 ஆயிரத்து 338 வாக்குகள் பெற்று பாஜகவிற்கு முதல் வெற்றியை தேடி தந்து தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார் சுரேஷ் கோபி.