நாங்கள் எந்த சோதனையாக இருந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்…யாரும் பொத்தம் பொதுவாக பேசக்கூடாது!
ரூ.1000 கோடி முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறார்கள்

நாங்கள் எந்த சோதனையாக இருந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்…யாரும் பொத்தம் பொதுவாக பேசக்கூடாது!
டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அதிமுக, பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை விவகாரங்களில் மத்திய அரசின் முகமூடிகளை தோலுரித்துக் காட்டும் வகையில் முதல்வர் எடுத்திருக்கும் தீவிர நடவடிக்கையை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவி தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு பிரிவுகளில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்கிறார்கள்.
ஆனால், எந்த முதல் தகவல் அறிக்கை? எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது? என்ற விவரங்கள் இல்லை. டாஸ்மாக் பணியிட மாற்றங்களில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. அதேபோல் ட்ரான்ஸ்போர்ட் டெண்டர் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது.
அதிலும் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை.
ஒரு நிறுவனம் பல்வேறு அரசு அலுவலகங்களில் டெண்டர் எடுக்கலாம். ஆனால், அந்த நிறுவனங்கள் வெளியில் அவர்களுக்குள் வரவு, செலவு கணக்குகளை ஏதோ டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக வரப்பெற்ற பணத்தின் மூலமாக கூடுதலான கொள்முதல் ஆணைகளை பெற்றதை போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த 4 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தை பொறுத்தவரை பார் டெண்டர்கள் முழுமையாக ஆன்லைன் டெண்டராக மற்றப்பட்டுள்ளது. எனவே, பொதுவாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கக்கூடிய ரூ.1000 கோடி முறைகேடு என்பது எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்லியிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறையின் சோதனையை பொறுத்தவரையில் சட்டரீதியாக எதிர்கொள்வோம், வெளிப்படைத்தன்மையுடன் இந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக, டாஸ்மாக் கொள்முதலில் யாருக்கும் சலுகைகள் காட்டப்படுவதில்லை, டாஸ்மாக் நிறுவனத்தில் புதிய கொள்கை முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.