புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!

Jul 23, 2024 - 22:58
 9
புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி ரத்து!

இந்திய மக்கள் பயன்பெறும் வகையில் முக்கியமான பல அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்.. இதில், மருத்துவ சாதனங்கள் குறித்தும் நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது... குறிப்பாக, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 508 மருந்துகளின் விலை கொண்டு வரப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.

ஆனாலும், பல்வேறு அத்தியாவசியமான மருந்துகளின் விலை அதிகரிப்பு, நோயாளிகளுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது.. அதிலும் புற்றுநோய் என்ற பயங்கர வியாதியை முழுமையாக குணமாக்கக்கூடிய மருந்துகளை எதிர்நோக்கி இந்தியா காத்து கிடக்கிறது.. இந்திய மருத்துவ முறைகளின்படி புற்று நோய்க்கான மருந்தைக் கண்டறியும் முயற் குறித்து, 2 வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவையில், திமுக எம்.பியான கனிமொழி என்விஎன்.சோமு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதாவது, அகில இந்தியஆயுர்வேத நிறுவனம், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனவா? என்று கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய ஆயுஷ் துறைஅமைச்சர் சர்பானந்த சோனோவால் பதிலளிக்கும்போது, "தேசிய புற்று நோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன், அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனடிப்படையில் ஒருங்கிணைந்த புற்று நோயியல்மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

இதற்கு பிறகு, அரியவகை நோய்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது..

அதுமட்டுமல்ல, இந்த வகை மருந்துகள் தேவைப்படும் பயனாளர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட, மத்திய சுகாதார ஆய்வாளர்களிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கும்போது, இந்த முழுவரி விலக்கு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. எப்போதுமே, வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு, சில வரிகளை விதித்து வந்த நிலையில், முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டது பொதுமக்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், 3 புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு அளித்துள்ளதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.. இன்றைய தினம் மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தபோது, மருத்துவ உபகரணங்கள் குறித்தும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்கவரி குறைக்கப்படுகிறது.. புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் நினைகூர வேண்டியிருக்கிறது.. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, "பெண்களைப் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து பேசியிருந்தார். குறிப்பாக "வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்திற்குக் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், இப்போது தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கர்ப்பப் பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 1.25 லட்சம் பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதும், 75,000 பேர் உயிரிழப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளதையடுத்து, கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுக்கும் செர்வாவாக் தடுப்பூசி உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.. இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் என்று கடந்த இடைக்கால பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.