பூந்தமல்லி அருகே சொத்து பிரச்சனையில் தந்தையை வேன் ஏற்றி கொலை செய்து நாடகம் ஆடிய மகன்
 
                                பூந்தமல்லி அருகே சொத்து பிரச்சனையில் தந்தையை வேன் ஏற்றி கொலை செய்து நாடகம் ஆடிய மகன்
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே  பாரிவாக்கம்,  பாலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(63), இவரது மகன் வெங்கடேசன்(26), நேற்று இரவு இவரது வீட்டின் அருகே இருந்த இவருக்கு சொந்தமான இடத்தை வாகனத்தை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவரை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
 இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் ராஜேந்திரன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  இதில் அவரது மகன் வெங்கடேசனே வேனை வைத்து தந்தையை ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. இது குறித்து போலீஸ் விசாரணையில் ராஜேந்திரனுக்கு சொத்து உள்ள நிலையில் அந்த சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு எழுதி வைப்பதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும் மேலும் ராஜேந்திரனுக்கும் அவரது மகன் வெங்கடேசனுக்கும் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு தந்தை சொத்தை கொடுக்க மாட்டார் என ஆத்திரத்தில் இருந்து வந்த வெங்கடேசன், நேற்று இரவு காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தான் சொந்தமாக இயக்கி வந்த வாகனத்தை தந்தையின் மீது ஏற்றி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. மேலும் வேனை ஏற்றி தந்தையை கொன்று விட்டால் விபத்து நடந்தது போல் இருக்கும் என நாடகமாடியதும் அம்பலமானது. இதையடுத்து தந்தையை வேன் ஏற்றி கொலை செய்து விட்டு வேனுடன் தலைமறைவான மகன் வெங்கடேசனை பூந்தமல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து பிரச்சனையில் தந்தையை மகனே வேன் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.                        
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            