ஒன்றிய அரசு நியமனம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாகவும் அவர் செயல்படுவார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் இயக்குநராக இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து அப்பணியிடம் காலியாக இருந்தது. இந்நிலையில் சென்னை ஐஐடியின் புதிய இயக்குனராக பேராசிரியர் காமகோடி நியமிக்கப்பட்டார். இதே போன்று டெல்லி ஐஐடி இயக்குனராக மும்பை ஐஐடி பேராசிரியர் ரங்கன் பானர்ஜி, மாண்டி ஐஐடி இயக்குனராக கான்பூர் ஐஐடி பேராசிரியர் லட்சுமிதர் பெகேரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சென்னை ஐஐடியின் 11வது இயக்குனராக பேராசிரியர் காமகோடி பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை நோக்கத்தின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே தம்முடைய உடனடி குறிக்கோள் என்றார்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப் படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.