கெஜ்ரிவால் விவகாரத்தில் நடப்பது என்ன?

May 11, 2024 - 01:51
 6
கெஜ்ரிவால் விவகாரத்தில் நடப்பது என்ன?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், அரசியல் சாசன விதிகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இல்லை என்றாலும், பிரசாரம் செய்வதற்காக எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இதுவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது இல்லை. எனவே இந்த வழக்கில் முக்கிய நபராக இருக்கும் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக ஜூன் 1-ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.மேலும் ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், கெஜ்ரிவால் ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தபோது உங்கள் வாதங்களை பின்னர் வையுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மட்டுமே அனுமதி என்றும் முதலமைச்சராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.