டெல்லியில் தேர்தல் வாக்குறுதி வெளியீடு!
இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக உள்பட மொத்தம் 25க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இந்த லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த 2014, 2019 தேர்தல்களில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் 3 இலக்க தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலுக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் வலு சேர்க்கும் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட உள்ளது. அதில் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தால் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் இடம்பெற உள்ளன. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தற்போதைய தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட மூத்த தலைவர்கள் வெளியிட உள்ளனர். இதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுகளை கவரும் வகையில் முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற உள்ளது.
மேலும் இலவச திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு குடியுரிமை திருத்த சட்டம் ரத்து, மாநிலம் வாரியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் சார்பில் 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அந்த 5 வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது. அதாவது ‛மகாலட்சுமி' திட்டத்தின் மூலம் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். ‛ஆதி ஆபாடி - பூரா ஹக்' திட்டத்தில் மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். ‛சக்தி கா சம்மான்' திட்டத்தில் ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு பணியாளர்களின் மாத ஊதியம் அதிகரித்து வழங்கப்படும். ‛அதிகார் மைத்ரி' திட்டத்தின்படி அனைத்து பஞ்சாயத்துகளிலும் பெண்களுக்கான சட்ட உரிமை சொல்லி கொடுக்கவும், ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க சட்ட நிபுணர் நியமனம் செய்யப்படுவார். ‛சாவித்ரி பாய் ஃபுலே விடுதி' திட்டத்தில் நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது. குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 5 வாக்குறுதிகளும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.