விடை கிடைக்குமா கொடநாடு வழக்கு? தீவிரம் காட்டும் சிபிசிஐடி!

Apr 30, 2024 - 01:55
 5
விடை கிடைக்குமா கொடநாடு வழக்கு? தீவிரம் காட்டும் சிபிசிஐடி!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டுமென 4 பேருக்கு சிபிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த 1 ஆண்டு காலமாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையிலும், விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் சமீபத்தில் நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. அதாவது இந்த கொடநாடு பங்களாவில் மேற்கொள்ளும் ஆய்வுக்கான அனைத்து சாட்சியங்களையும் சமர்பிக்க வேண்டுமெனவும், எந்த சாட்சியங்களும் அழிக்கப்பட கூடாதெனவும் விரைவில் இந்த வழக்கை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை துரிதப்படுத்தும் வகையில், தற்போது மேலும் 4 பேருக்கு சம்மன் வழங்கி நாளை கோவை சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இதில் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ரமேஷ், முன்பு ஜெயலலிதா எஸ்டேட்டுக்கு வரும் போதெல்லாம் காய்கள் உள்ளிட்ட பொருட்களெல்லாம் வாங்கி வரும் கோத்தகிரியை சேர்ந்த தேவன், கோவையை சேர்ந்த ரவிக்குமார், மற்றும் கோவையில் கார்களுக்கு நம்பர் ப்ளேட் பணி செய்யும் அப்துல் காதர் உள்ளிட்ட 4 பேருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் 4 பேரும் நாளை காலை 10 மணிக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.