இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
புவி கண்காணிப்பு செயற்கைகோளான இஒஎஸ்-8, எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைகோள் ஏவுதல் வாகனம் மூலம் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ராக்கெட் ஆகஸ்டு 16ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஒஎஸ்-8 செயற்கைகோள், மைக்ரோசாட்லைட்டை வடிவமைப்பது மற்றும் உருவாக்குவது, மைக்ரோசாட்லைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குவது மற்றும் எதிர்காலத்தில் செயற்கைகோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைப்பது ஆகியவற்றை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும், இஒஐஆர் கருவி, செயற்கைகோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் மற்றும் லாங்-வேவ் ஐஆர் பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும், எரிமலை கண்காணிப்பு, தொழில்துறை, மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.