திருப்பரங்குன்றம் விவகாரம் .... நீதிமன்றத்தை அதிர வைத்த வாதம்

திமுக அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது?

Dec 4, 2025 - 16:01
 9
திருப்பரங்குன்றம் விவகாரம் .... நீதிமன்றத்தை அதிர வைத்த வாதம்

திருப்பரங்குன்றம் விவகாரம்..... நீதிமன்றத்தை அதிர வைத்த வாதம்!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்று வரும் சூழலில் இன்றே இதற்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் வரலாறு கொண்ட திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கில் நீதிமன்றம் பல்வேறு முக்கிய விஷயங்களை ஆராய்ந்து தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கியது.

ஆனால் தமிழக காவல்துறை பலத்த பாதுகாப்பு போட்டு தடுத்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி துணை ராணுவம் உதவியுடன் மனுதாரர் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், காவல்துறை தரப்பில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த நிலையில் அதிரடி திருப்பமாக துணை ராணுவம் திருப்பரங்குன்றம் வந்தடைந்தது.

இதனைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் இந்து முன்னணியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தான் மலை உச்சியில் தீபம் ஏற்றாத விவகாரம் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

மனுதாரர் 10 பேருடன் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டுமெனவும் சிஐஎஸ்ஃஎப் அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் தடுத்தது திமுக அரசு.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த முடியாத ஒரு அரசு ஏன் இருக்க வேண்டும்?

இந்து அறநிலையத்துறை கோவிலுக்கு எதிராக ஏன் நிற்க வேண்டும்?

திமுக அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது? இது போல் தான் இந்துக்களுக்கும், பாரம்பரியத்திற்கு திமுக அரசு செயல்படும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே இது தொடர்பான விசாரணை இரு நீதிபதிகள் அமர்வில் இன்று முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது  நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதில், தனி நீதிபதி உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிஐஎஸ்ஃஎப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அவர்களின் அதிகார வரம்பு நீதிமன்றத்துக்குள் மட்டுமே செல்லும். அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு என்றும், சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

10 பேருடன் சென்று தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், மனுதாரர் கூட்டமாக சென்று பிரச்சனை ஏற்படுத்தியதால் அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது

மேலும், கலவரத்தை தடுப்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தை தவிர்த்து விட்டு மனுதாரரை தீபம் ஏற்ற சொல்வது ஏற்றுக்கொள்ள இயலாது என தர்கா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து கோவில் நிர்வாகம் ஏற்ற வில்லை எனில் மாற்று வழியை யோசிக்கலாம். அதற்கு நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து,திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆண்டிற்கு ஒருமுறை சில மணி நேரம் தீபம் ஏற்றுவது எவ்வாறு சமூகப் பிரச்சனையை உருவாக்கும். பதட்டமான சூழலை உருவாக்கும்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சூழலில் எந்தவிதமான ஏற்பாடும் செய்யாமல் கோவில் நிர்வாகம் இருந்துள்ளது. எனவே தனி நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளார்? உத்தரவு நடைமுறைப்படுத்துவதற்காக சில மாற்று உத்தரவுகளை வழங்கி உள்ளார்.ஆனால் அவர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இதற்கு இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என கூறி தற்போது இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர், மேலும் இது தொடர்பான உத்தரவு இன்று மாலை வெளியாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.