கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை - பிரதமர் மூட் எகெடே

டிரம்ப் கருத்துக்கு எதிர்ப்பு

Dec 24, 2024 - 17:49
Dec 24, 2024 - 18:56
 10
கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை - பிரதமர் மூட் எகெடே

கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை - பிரதமர் மூட் எகெடே

கிரீன்லாந்தின் உரிமையும் கட்டுப்பாடும், அமெரிக்காவுக்கு அவசியம் என்று கூறிய டிரம்ப் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'கிரீன்லாந்து எங்களுடையது; விற்பனைக்கு இல்லை' என அந்நாட்டு பிரதமர் மூட் எகெடே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும்.

அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும். இந்த நாட்டின் மக்கள் தொகையானது வெறும் 56,000 பேர் மட்டுமே. இது, ஐரோப்பிய நாடான டென்மார்க் ஆளுகைக்கு உட்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாகும்.


இங்கு கணிசமான நிலப்பரப்பு இருந்தாலும், மக்கள் அடர்த்தி மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் கிரீன்லாந்தும் ஒன்று. இதன் புவியியல் முக்கியத்துவம் கருதி, அமெரிக்கா தன் மிகப்பெரிய விமானப்படை தளத்தை இந்த நாட்டில் வைத்திருக்கிறது.

இங்கு பனிமலைகள், பென்குவின்கள், துருவக் கரடிகளுக்கு பஞ்சமில்லை. கிரீன்லாந்தில் நிலவும் அதிக குளிர் காரணமாக இந்நாட்டில் பெரிய அளவு தொழில் வளர்ச்சி, கல்வி, தொலைத் தொடர்பு வசதிகள் கிடையாது.

ஆண்டுதோறும் டென்மார்க் அரசு வழங்கும் மானியம் மட்டுமே இந்த நாட்டின் பிரதான வருவாயாக உள்ளது.

எனவே, தங்கள் நாட்டின் விமானப்படை தளம் இங்கு இருப்பதால், இதை தங்களுக்கே சொந்தமாக்க அமெரிக்கா விரும்புகிறது. கடந்த முறை அதிபராக இருந்தபோது டிரம்ப் இந்த கருத்தை வெளிப்படையாக தெரிவித்தார். இதற்கு கிரீன்லாந்தும், டென்மார்க்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப் மீண்டும் தன் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கிரீன்லாந்தின் உரிமையும், அதன் கட்டுப்பாடும் அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது' என டிரம்ப் கூறியிருந்தார்.அவரது இந்த கருத்துக்கு, கிரீன்லாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு, 'கிரீன்லாந்து எங்களுடையது. விற்பனைக்கு கிடையாது. ஒரு போதும் விற்பனை செய்ய மாட்டோம்' என்று பிரதமர் மூட் எகெடே கருத்து தெரிவித்துள்ளார். 'அமெரிக்காவின் விருப்பத்தை முறியடிக்க வேண்டும். இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்' என்று பார்லிமென்டின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஜார்லோவ் கூறினார். டிரம்பின் கருத்துக்கு டென்மார்க் நாடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 'பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும்,'' என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். டிரம்பின் இந்த கூற்றுக்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோ கண்டனம் தெரிவித்தார்.

'பனாமா கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும் எங்களுடையது, அதைச் சுற்றியுள்ள பகுதியும் எங்களுடையது. பனாமாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தில் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது' என்று அதிபர் முனிலோ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.