செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் வலியுறுத்தல்!
தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவில் எப்படியேனும் சாதனை படைத்து விட துடிக்கின்றன
செயற்கை நுண்ணறிவு குறித்த பிரதமர் மோடியின் வலியுறுத்தல்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு பிரதமர் மோடி, அதிபர் மேக்ரோன் தலைமையில் தொடங்கியுள்ளது.
வருங்கால தொழில்நுட்பம் என்று கருதப்படும் செயற்கை நுண்ணறிவு, இப்போது அறிவியல் உலகை ஆட்டிப்படைக்கிறது. அனைத்து முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவில் எப்படியேனும் சாதனை படைத்து விட துடிக்கின்றன.
இதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்ந்து, மனித குலத்துக்கு பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்வது எப்படி என்பது பற்றிய சர்வதேச உச்சி மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.
மாநாட்டுக்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் ஆகியோர் இணைந்து தலைமை வகிக்கின்றனர்.
மாநாட்டின் துவக்க உரையில் பிரதமர் மோடி பேசியதாவது;செயற்கை நுண்ணறிவு என்பது ஏற்கனவே நமது அரசியல், சமூகம், பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.
அது இந்த நூற்றாண்டில் மனித சமுதாயத்திற்கான மென்பொருளை எழுதிக் கொண்டிருக்கிறது. மனித வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தக்கூடிய நேர்மறையான தாக்கங்கள் அற்புதமானவை.
மனித குலத்தின் வரலாற்றில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை காட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி வரும் முன்னேற்றங்கள் மிகவும் வித்தியாசமானவை. முன் எப்போதும் இல்லாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவு வேகமாக பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது.
உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் அது பயன்பாட்டுக்கு வரும்போது, அதனால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை, பிரச்சனைகளை சரி செய்ய நாம் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அதற்கு இந்த மாநாடு பயன் தரும் என்று நம்புகிறேன்.
நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் open source அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும். சார்பு இல்லாத தரமான தரவு மையங்களை உருவாக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஜனநாயகப்படுத்த வேண்டும். இணைய பாதுகாப்பு, தவறான தகவல் பரப்புதல் மற்றும் deepfake தொடர்பான கவலைகளை தீர்க்க வேண்டும்.
வேலை இழப்பு ஏற்படும் என்பது தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பலரது அச்சமாக உள்ளது.
ஆனால் தொழில்நுட்பம் காரணமாக வேலை இழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறுகிறது என்பதை வரலாறு காட்டுகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மாநாட்டில் பல்வேறு நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.