சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்…..அதன் சிக்கல்……மக்களுக்கு இதனால் என்ன பயன்?
சாதிவாரி கணக்கெடுப்பில் பொதுமக்களின் தரவுகளை எப்படி பாதுக்காப்பார்கள்
![சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்…..அதன் சிக்கல்……மக்களுக்கு இதனால் என்ன பயன்?](https://channel5tamil.com/uploads/images/202502/img_67aca23cb00526-80311962-42342383.gif)
சமூக நீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு!
சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம்….. அதன் சிக்கல் ……மக்களுக்கு இதனால் என்ன பயன்?
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் களம் மத்தியில் பேசும் பொருளாகி இருக்கும் நிலையில் இந்த சாதி வாரி கணக்கெடுப்பு ஏன் தேவை, எதன் கீழ் இந்த கணக்கெடுப்பு சாத்தியமாகும், இதில் இருக்கும் சிக்கல் என்ன
நீண்ட காலமாக சர்ச்சையை ஏற்படுத்தும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தற்போது சாதிவாரி கணக்கெடுப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் சேர்ந்தே எடுக்க வேண்டும் என்பது தான் அதிகரித்து வரும் கோரிக்கையாக உள்ளது.
சட்டம் 1948-ன் படி ஒவ்வொறு 10 ஆண்டுகளுக்கு 1 முறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மக்கள் தொகை கணக்கெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது.
அப்படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி பற்றிய தகவல்களும் இடம்பெற்று வந்தது. அதன்பிறகு இரண்டாம் உலகப்போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1941-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சாதி குறித்த தகவல்கள் சேகரிக்கப்பவில்லை.
இடையூறுகள் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்தே, இந்தியாவில் உள்ள சாதிகள் மதங்கள், இனங்களை வகைப்படுத்துவது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் ஒரு சவாலாகவே இருந்தது.
அதன்படி, 1901-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,646 சாதிகள் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் 1941-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 4,147 ஆக உயர்ந்தது.
இதனையடுத்து இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு, முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது.
ஆனால், அரசியலமைப்பு பிரிவு, 341 மற்றும் 342ன் படி பட்டியல் இன மக்கள்,பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
மற்ற சாதிகள் குறித்த எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை.
சாதிவாரியான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்ததால் கடந்த 2011-ல் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு என்ற பெயரில் மத்திய அரசு சாதி கணக்கெடுப்பை நடத்தியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ன் படி தனி நபரின் தனிப்பட்ட தகவல்களை அரசாங்கம் ரகசியாக வைத்திருக்க வேண்டிய நிலையில் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு பொது வெளியில் சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி தோல்வியில் முடிந்தது.
கடந்த 2021-ல் நடைபெற இருந்த 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பானது கொரோனா தொற்றால் நடைபெறவில்லை.
அடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்து வந்த நிலையில் தான் பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை ந டத்தி முடித்தது பேசும் பொருளாகி இருந்தது.
இந்த தரவுகள் வெளியான பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்னும் கோரிக்கை மேலும் வலுக்க தொடங்கி தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அவசியம் என்ன, அதை வலியுறுத்துபவர்களின் காரணம் என்ன என்று கேட்டால்,
சாதி ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்
அதாவது, இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் தேவை. நலத் திட்டங்களை அரசு மேற்கொள்ளும் போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும்.
அதே போல், பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவியாக இருக்கும்.
மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
சமத்துவமின்மையை சரிசெய்யவும், நலத்திட்ட ஏற்பாடுகளை சிறப்பான முறையிலும் மேற்கொள்ளலாம்.
அரசு நலத்திட்டங்களின் உண்மையான பலன்கள் இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் மக்களுக்கும் வழங்கப்படுவதை சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
இதில் இருக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால்,
இது சாதிய அரசியலுக்கு வலு கொடுத்துவிடுமோ,. அதே சமயம், ஓட்டு அரசியலுக்கு பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சமும் நிலவுகிறது.
இறுதியாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பிலும் பொதுமக்களின் தரவுகளை எப்படி பாதுக்காப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.