விஜய் உண்மைக்கு புறம்பாக பேசியது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது – நடிகர் சரத்குமார்
உலகம் போற்றும் பிரதமர் மோடி

விஜய் உண்மைக்கு புறம்பாக பேசியது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது – நடிகர் சரத்குமார்
பிரதமர் நரேந்திர மோடி குறித்து விஜய் உண்மைக்கு புறம்பாக பேசியது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது என பதிலடி கொடுத்துள்ளார் பாஜக பிரமுகரும் நடிகருமான சரத்குமார். உலகம் போற்றும் பிரதமர் மோடியை சாதாரண மனிதராக எண்ணி கேலியாக பேசியது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் விமர்சித்து பேசி இருந்தார்.
பாரத பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி வருவாயை வாங்கிக்கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக்கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துக்களை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.
உலக அளவில் இந்திய பொருளாதாரம் முன்னேறிவரும் நிலையில், விரைவில் 3-வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கும் சூழலில், நமது தேசத்தை, தேசத்தின் பொருளாதாரத்தை வளர்ச்சிகரமான முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, சர்வதேச தலைவர்களும் வியந்து பாராட்டி வருவதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய பெருமைக்குரிய பாரத பிரதமர் குறித்து எதிர்மறையாக பேசுவதற்கு முன்பாக எதை பேசினாலும், உண்மையை படித்துப்பார்த்து, தமிழ்நாட்டில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன, எதற்காக மாநில அரசுக்கு கல்விக்கான நிதியை விடுவிக்காமல் மத்திய அரசு இருக்கிறது, வரிப்பங்கீடு ஏன் குறைகிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்களை அறிந்து, புரிந்து கொண்டு, ஆராய்ந்து தெளிவாக பேசியிருந்தால், அதுவும் பொதுக்குழுவில் பேசியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
தமிழகத்தில் நெடுஞ்சாலை வசதிகள், சாலை போக்குவரத்து, இரயில்வே உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்பாடு, புதிய விமானநிலையங்கள் உருவாக்கம், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, சிலிண்டர் மானியம், பிரதமரின் மருத்துவ காப்பீடு, மக்கள் மருந்தகம், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டிற்காக பல கோடி கடனுதவித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன்வளர் பயிற்சி, கல்வி மேம்பாடு என எத்தனையோ திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி இருப்பது மத்திய அரசு என்பதையும் நீங்கள் உணர மறந்துவிட்டீர்கள்.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்து கொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவர், உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக்கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆகவே, ஏற்கெனவே நான் சொன்னது போல இனிவருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளை பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் ஈடுபடுவீர்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.