முதல்முறையாக பெண் தலைமை; 64 வயதான சனே தகைச்சி யார் தெரியுமா?

முதல் முறையாக ஒரு பெண்ணின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது

Oct 9, 2025 - 12:26
 5
முதல்முறையாக பெண் தலைமை; 64 வயதான சனே தகைச்சி யார் தெரியுமா?

முதல்முறையாக பெண் தலைமை; 64 வயதான சனே தகைச்சி யார் தெரியுமா?   

70 ஆண்டுகாலமாக ஜப்பான் அரசியலில் ஒரே பெரும் சக்தியாக விளங்கும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி என்ற LDP கட்சி, சனே தகைச்சியின் மூலம், முதல் முறையாக ஒரு பெண்ணின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது. கட்சியின் தலைவரே பிரதமராக இருப்பார் என்ற அடிப்படையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகி உள்ளார் 64 வயதான சனே தகைச்சி.

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரேட் தாட்சரை தனது ரோல் மாடலாகக் கொண்ட சனே தகைச்சி, முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் தீவிர பழமைவாத சித்தாந்த சீடராக விளங்கினார்.

சீனா மற்றும் வட கொரியா மீதான வெறுப்பும், பகையும் கொண்ட தீவிர தேசியவாதியாகவும், அரசியலமைப்பு சார்பு திருத்தவாதியாகவும் உள்ள சனே தகைச்சி ஜப்பானின் பாரம்பரிய சமூக கட்டமைப்பின் தீவிர பாதுகாவலராகவும் உள்ளார்.

பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஜப்பானின் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் நவீன மாற்றங்களை உருவாக்கும் ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும் இருக்கிறார்.

1993ம் ஆண்டு, 32 வது வயதில் தனது சொந்த ஊரான நாராவிலிருந்து முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சனே தகைச்சி உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகவும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அபெனோமிக்ஸ் எனப்படும் எளிதான பணக் கொள்கைகளை வலியுறுத்திய சனே தகைச்சி, செமிகண்டக்டர் உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும் முன்னுரிமை அளித்து வந்தார்.

விநியோகச் சங்கிலி பல்வகைப்படுத்தலுக்கு ஒரு முக்கியமான ஜனநாயக, தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி நட்பு நாடு என்று இந்தியாவைப் பாராட்டியுள்ள சனே தகைச்சி, தாம் ஜப்பானின் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த காலங்களில் இருமுறை பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய சனே தகைச்சி, இந்திய - பசுபிக் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த 25 ஆண்டுகளாகவே இந்தியாவும், ஜப்பானும் இருநாடுகளின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை பேணி வருகின்றன.

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு டெல்லி மெட்ரோ முதல் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வரை, நிதி மற்றும்தொழில்நுட்ப வகையில் ஜப்பான் பங்களித்துள்ளது. மலபார் பயிற்சி தொடங்கி பாதுகாப்புத் துறையில் இரு நாட்டுக் கடற்படைகளும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும் ஜப்பானின் US-2 ஆம்பிபியஸ் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. தொழில்நுட்பத் துறையில், குறிப்பாக இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டத்தில் ஜப்பான் இணைந்துள்ளது.

இந்தச் சூழலில், ஜப்பானின் பிரதமராகச் சனே தகைச்சி பதவியேற்பது, இந்தியாவுக்குச் சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இனி ஜப்பானின் பொருளாதார பாதுகாப்பின் அச்சாணியாக இந்தியா மாறக்கூடும் என்றும், ஜப்பான்-இந்தியாவின் அச்சாக மாறக்கூடும் என்று நம்பப்படுகுிறது. செமிகண்டக்டர், அரிய வகை கனிமங்கள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் AI உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் ஜப்பான் இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம், சீன விநியோகச் சங்கிலித் தாக்கத்திலிருந்து ஜப்பானின் தொழில்நுட்பத் தளத்தைப் பாதுகாப்பதற்கு இந்தியாவுடனான உறவைச் சனே தகைச்சி வலுப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. குவாட் அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஜப்பான், இந்திய பசிபிக் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டு மேம்பாடு மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் முதலீடு செய்யத் தயாராகும் என்பதால், அது இந்தியாவுக்குப் பலமாக அமையும் என்று கருதப் படுகிறது.

சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் அடிக்கடிப் பாதிக்கப்படும் இந்தியாவும், ஜப்பானும் பயனுள்ள இடங்களில் ஒத்துழைக்கவும், தேவையான இடங்களில் தடுக்கவும் என ராஜதந்திரத்தை இணைந்து பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் மோடியும், சனே தகைச்சியும், தன்னம்பிக்கை, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பொருளாதார தேசியவாதம் மற்றும் இறையாண்மை குறித்த உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் என்பதால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவு தொழில்முறை மற்றும் நடைமுறை சார்ந்ததாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.