50 மி.லி தாய்ப்பால் 500 ரூபாய்… சட்ட விரோதமாக விற்கப்பட்ட தாய்ப்பால்!

Jun 1, 2024 - 23:47
 9
50 மி.லி தாய்ப்பால் 500 ரூபாய்… சட்ட விரோதமாக விற்கப்பட்ட தாய்ப்பால்!

50 மி.லி தாய்ப்பால் 500 ரூபாய்...சட்ட விரோதமாக விற்கப்பட்ட தாய்ப்பால்!

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பால் விற்பதை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் உள்ள முத்தையா என்பவருக்கு சொந்தமான லைப் வேக்சின் ஸ்டோர் என்ற பெயரில் உள்ள மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பாலை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்றதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலின் படி அந்த கடைக்கு சீல் வைத்தனர். மேலும் அந்த கடையில் இருந்து 50க்கும் மேற்பட்ட தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் முத்தையாவிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் 50ml பாட்டில் 500-க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக பேசியுள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாய்ப்பாலை விற்க தடை விதித்து உள்ளது. கடையில் தாய்ப்பால் விற்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு செய்து வருகிறோம். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக வழங்கப்பட்ட லைசென்ஸ் நம்பரை வைத்து, தாய்ப்பாலை பாட்டில் மூலம் விற்பனை செய்து வந்துள்ளனர். தாய்ப்பால் பாட்டிலில், யாரிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டது, எந்த தேதியில் பெறப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தாய்ப்பாலை சேகரித்து வைத்தால், நுண்ணுயிர் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. அதில் இயற்கையாகவே தாய்ப்பாலில் இருக்கும் புரதங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறி. பாட்டிலில் அடைத்து வைத்து தாய்ப்பால் விற்பது தடை செய்யப்பட்ட ஒன்று. எனத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை தொடர்பான
கண்காணிப்பை தமிழ்நாடு முழுவதும் தீவிரப் படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை முழுவதும் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.