விடுதலையான நியூஸ் கிளிக் நிறுவனர்! ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும்!
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் ஊடகத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பிரபிர் புர்காயஸ் தாவை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சீனாவிடம் இருந்து நிதி உதவி பெற்று நியூஸ் க்ளிக் ஊடகம் மூலமாக தேச விரோத பிரச்சாரத்தை பிரபிர் புர்காயஸ்தா ஊக்குவித்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்தி வெளியானது.
இதனையொட்டி, டெல்லியில் உள்ள நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் பிரபிர் புர்காயஸ்தா வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கடந்த அக்டோபர் 3ம் தேதி பிரபிர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து பிரபிர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பி.ஆர் கவாய் சந்தீப் மேத்தா அமர்வு, ரிமாண்ட் விண்ணப்பத்தின் நகலை பிரபிருக்கு வழங்காதது சட்டவிரோதமாகும். எனவே, அவரது கைது நடவடிக்கை செல்லாது, இதனால் இந்த வழக்கிலிருந்து பிரபிரை நாங்கள் விடுதலை செய்கிறோம் எனவும், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விடுதலை ஆகும் போது சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்களை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.