அமைச்சர் பேரில் சூர்யாவுக்கு பாதுகாப்பு! ஆள் இல்லாத வீட்டுக்கு ஏன் பூட்டு?

May 17, 2024 - 19:36
Sep 9, 2024 - 23:58
 11
அமைச்சர் பேரில் சூர்யாவுக்கு பாதுகாப்பு! ஆள் இல்லாத வீட்டுக்கு ஏன் பூட்டு?

ஆளுங்கட்சி அரசியல் சிவாரிசால் தான் இலவசமாக இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.

கடந்த 2021ல் ஜெய்பீம் திரைப்படம் வெளியானது வெளியானதை அடுத்து, ஜாதி வெறியை தூண்டும் வகையில் இந்த படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதில் இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா, நடிகர் சூர்யா ஆகியோர் மீது, சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் அலுவலகத்தில் பாமக நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர்.

இதன் காரணமாக, சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. நாளடைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்படாமல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

சூர்யா வீடு முன், ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா குடும்பத்துடன் மும்பையில் தங்கியிருந்த போதும், அவரது சென்னை வீட்டுக்கு அரசு செலவில் பாதுகாப்பு அளிக்கப்படுவது ஏன் என, பல தரப்பிலும் கேள்வி எழுப்பப்படுகிறது.

இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நடிகர் வீட்டுக்கு யாருடைய உத்தரவுப்படி, எந்த தேதியிலிருந்து ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு போலீசார் உத்தரவின் பேரில் கடந்த 2021ல் தற்காலிகமாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி, பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது எனவும், பதில் அளிக்கப்பட்டது.   

அதோடு, பாதுகாப்பு அளிப்பதற்கு சூர்யா எதுவும் பணம் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பொதுவாக, அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் போது, சம்பந்தப்பட்ட நபர் காவல் துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும், 2அரை ஆண்டுகளாக, நடிகர் சூர்யா ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் இருப்பதுடன், அரசு செலவில் அவரின் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருவது நியாயமில்லாதது என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

குறிப்பாக தற்போது சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இருந்தும் சென்னையில் உள்ள வீட்டிற்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வர காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இது குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் கூறுகையில் அமைச்சர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார்.