நான் ஏன் அறைந்தேன் தெரியுமா? குல்விந்தர் கவுர் விளக்கம்!

Jun 7, 2024 - 23:49
Sep 9, 2024 - 23:39
 8
நான் ஏன் அறைந்தேன் தெரியுமா? குல்விந்தர் கவுர் விளக்கம்!

சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்பியாக தேர்வாகி உள்ளவருமான கங்கனா ரனாவத்தை நேற்று சிஐஎஸ்ஃஎப் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் குல்விந்தர் கவுர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகையாக இருந்து அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளவர் தான் கங்கனா ரனாவத். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரேதேச மாநிலம் மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கங்கனா ரனாவத் வெற்றியும் பெற்றார்.

மாண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் மொத்தம் 5 லட்சத்து 37 ஆயிரத்து 22 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 267 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் கங்கனா ரனாவத் 74,755 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு கங்கனா ரனாவத் சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் கான்டபிள் அவரது கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட கங்கனா ரனாவத், ‛‛பஞ்சாப்பில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது'' என குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் கான்ஸ்டபிள் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக குல்விந்தர் சிங் கூறுகையில், ‛‛விவசயிகள் 100 ரூபாய் வாங்கி கொண்டு போராட்டம் நடத்துவதாக கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அப்போது என் தாய் டெல்லியில் போராடி கொண்டிருந்தார். விவசாயிகளை அவமதித்ததால் கோபம் ஏற்பட்டது'' என தெரிவித்தார்.

இந்நிலையில் தான் கங்கனா ரனாவத்தை அறைந்த குல்விந்தர் கவுர் யார்? அவரது பின்னனி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த 35 வயதான குல்விந்தர் கவுர் பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் லோதி பகுதியை சேர்ந்தவர்.. இவர் கடந்த 2009ல் சிஐஎஸ்ஃஎப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சண்டிகர் விமான நிலையத்தில் பணி செய்து வருகிறார்.

இவரது கணவரும் சிஐஎஸ்ஃஎப்பில் தான் பணியாற்றி வருகிறார். இவரும் சண்டிகர் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவரது சகோதரர் செர் சிங் விவசாய சங்கத்தில் நிர்வாகியாகவும், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ கமிட்டியின் செயலாளராகவும் உள்ளார். இவரது குடும்பம் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களின் ரத்து உள்பட குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விவசாய போராட்டங்களில் அவரது குடும்பம் பங்கேற்று இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், கங்கனா ரனாவத்தை தாக்குவதற்கு முன்பு வரை அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும், தண்டனையும் அவர் பெற்றது இல்லை. இத்தகைய சூழலில் தான் தற்போது கங்கனா ரனாவத்தை அறைந்ததாக குல்விந்தர் கவுர் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.