அண்ணாமலையின் சொத்து இவ்வளவா? நிலுவையில் உள்ள 26 வழக்குகள்!

Mar 28, 2024 - 23:42
 17
அண்ணாமலையின் சொத்து இவ்வளவா? நிலுவையில் உள்ள 26 வழக்குகள்!

கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, தன் மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்ல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள், தன் மீது உள்ள வழக்குகளின் விவரங்களை பிரமாண பத்திரமாக அண்ணாமலை தாக்கல் செய்துள்ளார். அதன்படி அண்ணாமலை மீது 24 வழக்குகள் உள்ளன. தனிப்பட்ட வகையில் 2 புகார்கள் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கவால் நிலையம், தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலையம், திருச்சி மாவட்டம் காந்தி மார்க்கெட் காவல் நிலையம், சென்னை மாநகர் காவல் நிலையம், நுங்கம்பாக்கம் காவல் நிலையம், எழும்பூர் காவல் நிலையம், திருவள்ளூர் நகர் காவல் நிலையம், சென்னை பூக்கடை சரகத்திற்கு உட்பட்ட கடற்கரை காவல் நிலையம், கரூர் நாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம், திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையம், கோவை மாவட்டம் ரத்தினபுரி காவல் நிலையம் உள்பட 24 வழக்குகள் அண்ணாமலை மீது நிலுவையில் உள்ளன.

மேலும், சேலத்திலும், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன் மீதான வழக்குகளுக்கு இன்னும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றும் அண்ணாமலை, பிரமாண பத்திரத்தில் தகவல் அளித்துள்ளார். அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 லட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. அண்ணாமலை 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் (2017) வைத்துள்ளார்.

அதே நேரத்தில் கடைகள், வணிக கட்டிடங்கள், குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் கோவை லோக்சபா தொகுதி வேட்பாளரான அண்ணாமலைக்கு இல்லை. அதேபோல கடன் எதுவும் அவருக்கு இல்லை.

வருவாய்க்கான ஆதாரமாக தனியார் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மொத்தமாக சுமார் 51 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 12 லட்சம் ஆகும். இவரின் மனைவில் அகிலா பெயரில் 53 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்து உள்ளது. எனினும் இவை அனைத்தும் பூர்விக நிலங்கள் ஆகும். மொத்தம் 3 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து அண்ணாமலை குடும்பத்திற்கு உள்ளது.