200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்க

Mar 20, 2025 - 15:34
 19
200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

பஞ்சாப்ஹரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக போராடிய 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை பஞ்சாப் காவல் துறை கைது செய்துள்ளது.விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், டெல்லிபஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல் உள்ளிட்டோர், விவசாய சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த குழுவினரை சந்தித்துவிட்டு மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஜக்ஜித் சிங் தல்லேவாலை ஆம்புலன்சில் வைத்தே காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பஞ்சாப்ஹரியானா எல்லையில் அங்கு விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களையும் இரவோடு இரவோக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு போலீசார் அழித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஜலந்தர் காங்கிரஸ் எம்.பியுமான சரஞ்சித் சிங் சன்னி, ஆளும் ஆம் ஆத்மி அரசை கடுமையாக சாடியுள்ளார்.அவர், “முதல்வர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அதனையடுத்து சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் தாக்கப்படுகின்றனர். பஞ்சாப் மட்டுமல்ல, முழு விவசாய சமூகமும் இன்று ஒரு பெரிய தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. பஞ்சாப் துயரமான காலத்தில் உள்ளது.மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அடுத்த சுற்று பேச்சுவார்த்தை மே 4 அன்று நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் ஏமாற்றப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் மத்திய அரசு தடுக்கிறதுஎன்று கூறினார்.அதே போன்று, ஷிரோமணி அகாலிதளம் (SAD) தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், “பஞ்சாப் விவசாயிகளுக்கு ஐந்து நிமிடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குவதாக உறுதியளித்த பகவந்த் மான் அரசு, இன்று விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்கக்கூடத் தயாராக இல்லை. விவசாயத் தலைவர்கள் மற்றும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், பஞ்சாப் அரசு கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.