பீகாரில் பரபரப்பு! யார் இந்த சவுரவ் குமார்?

Apr 26, 2024 - 18:43
 6
பீகாரில் பரபரப்பு! யார் இந்த சவுரவ் குமார்?

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிர்வாகியான சவுரவ் குமார், அடையாளம் தெரியாத கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் அங்கு கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளை கொண்ட பீகாரில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாக கடந்த 19 ஆம் தேதி 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் பரபரப்புக்கு இடையே ஆளும் நிதிஷ் குமாரின் கட்சியை சேர்ந்த நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விரிவாக பார்க்கலாம்,

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவராக இருப்பவர் சவுரவ் குமார். இரவு தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு முன்முன்குமார் என்ற தனது நண்பருடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், சவுரவ் குமாரின் நெற்றியில் குண்டு பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிரிழந்தார். அவரது நண்பர் முன்முன்குமார் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் முன்முன் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை நடத்தினர். இதனிடையே, சவுரவ் குமார் சுட்டுகொல்லப்பட்டதால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்துள்ளனர். சவுரவ் குமார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடப்பதாகவும் தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடைபெற்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.