மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டு! அமெரிக்க முயற்சி பயனளிக்காது!
அமெரிக்க அமைப்பு மீது மத்திய அரசு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் USCIRF- அதாவது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த அறிக்கையை வெளியிடும்.
அதன்படி இந்தாண்டிற்கான அறிக்கையை இந்த அமைப்பு கடந்த மே 1ஆம் தேதி வெளியிட்டது. அதில் 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் (Country of Particular Concern) என கூறப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற்று இருந்தது தான் பேசுபொருளானது. இந்தியா இந்த வரிசையில் 5ஆவது ஆண்டாகத் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த ரிப்போர்ட் குறித்து மத்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது. அதில் அமெரிக்காவின் இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு பக்கச் சார்புடைய அமைப்பு தான்.. அவர்களுக்கு சில அரசியல் நோக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா குறித்து இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மாறுபட்ட, பன்மைத்துவ மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை இந்த அமைப்பு புரிந்துகொள்ள முயலுமா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை.. இருப்பினும், உலகின் மிகப்பெரிய தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது" என கூறியுள்ளார்.
இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அமெரிக்க அரசுக்குக் கீழ் இயங்குகிறது. எனவே, ரந்தீர் ஜெய்ஸ்வாலின் இந்த கருத்து நேரடியாக அமெரிக்காவைச் சாடுவது போல இருந்தது.
. இதன் முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் மனித உரிமைகள் ஆணையமும் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த ரிப்போர்ட்டையும் கடந்த வாரம் இந்தியா நிராகரித்து இருந்தது. இருப்பினும், அப்போது இந்தியத் தேர்தல்களில் அமெரிக்கா தலையிடுவதாக வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டவில்லை. இந்தச் சூழலில் வெளியுறவுத் துறை செயலாளரின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.