தமிழகத்தில் புயல் எச்சரிக்கை!
வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றுத்தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 30.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 10 மணிவரை கன்னியாகுமரி, நெல்லை , தென்காசி , தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்திய கிழக்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது. அதைத் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து இன்று இரவுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் நாளை நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
கரையைக் கடக்கும் பொழுது மணிக்கு 110-120 வேகத்திலும், இடையிடையே 130 கிமீ வேகத்திலும் காற்று வீச கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 14 இடங்களில் கனமழையும், கன்னியாகுமரியில் 10 செ.மீ மழையும், மாம்பழத்துறையாறில் 9 செ.மீ மழையும், பாலமோர் மற்றும் ஆணைக்கிடங்கு, தக்கலையில் 8 செ.மீ மழையும், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் 7.செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.