ராகுல்காந்தி சரமாரி கேள்வி!
அதானி குழும முறைக்கேடு விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயங்குவது ஏன் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அதானி குழுமம் முறைகேடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படும் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவரும் அவருடைய கணவரும் பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன் பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, குற்றச்சாட்டுக்கு ஆளான செபி அமைப்பின் தலைவர் மாதவி ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என நாடு முழுவதும் உள்ள நேர்மையான முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்கள் பணத்தை இழந்தால் அதற்கு பிரதமர் பொறுப்பேற்பாரா இல்லை செபி அமைப்பின் தலைவரா அல்லது கவுதம் அதானி பொறுப்பேற்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ளுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.