கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்! நாங்கள் அதற்கு பொறுப்பாக முடியாது!

May 17, 2024 - 20:17
 8
கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம்! நாங்கள் அதற்கு பொறுப்பாக முடியாது!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவதற்காக, ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மக்கள் இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஓட்டளித்தால், இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.

அப்படி நடந்தால், ஜூன் 2ம் தேதி நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது என பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே, கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு நேற்று கூறிய போது,

நாங்கள் யாருக்கும் எந்த சலுகையும் அளிக்கவில்லை எனவும், சட்டத்தின்படி எது சரியோ, அதையே செய்துள்ளதால் எங்களுடைய உத்தரவில் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளோம். அதே போல எப்போது மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜூன் 2ம் தேதி அவர் சிறையில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு தொடர்பாகவோ, நீதிமன்ற உத்தரவு தொடர்பாகவோ பேசக்கூடாது என எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அதனால், ஜூன்2ம் தேதிக்குப் பின், மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது என கூறியுள்ளது அவருடைய சொந்த கணிப்பு இதில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.