சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி! Chennai Marina

Oct 5, 2024 - 23:23
 26
சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி! Chennai Marina

சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி! 

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.  

விமான சாகச நிகழ்ச்சியை காண கட்டணம் இல்லை!

பிரம்மாண்டமாக நடைபெறும் இந்திய விமானப்படையின் சென்னை ஏர் ஷோ 2024 நிகழ்ச்சியை பொதுமக்கள் எந்தவித கட்டணமும்  இன்றி இலவசமாகவே கண்டுகளிக்கலாம். ஆனால், வாகனங்களை நிறுத்த மட்டும் பாஸ் தேவை. அதுமட்டுமின்றி இந்த விமான சாகசத்தை நேரில் காண்பதற்கு சீக்கிரமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால், சீக்கிரமாக செல்பவர்களுக்கு, அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க சிறந்த இடம் கிடைக்கும். மேலும் இந்த சாகச நிகழ்ச்சியில், மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்க உள்ளது.

விமான சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் போர் விமான சாகச நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி காரணமாக, போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மேலும், பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, கூட்ட நெரிசலை தவிர்க்க மெட்ரோ மற்றும் MRTS ரயில்களை பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மெரினா கடற்கரை அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கார் பார்க்கிங் வசதிகளையும் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள்!

விமான சாகச் நிகழ்ச்சிக்காக மெரீனா கடற்கரைக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் வழக்கமாக அண்ணா சதுக்கத்திற்கு இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.