உச்சத்தை தொட்ட தங்கம் விலை – வரலாறு காணாத உயர்வுக்கு இதுதான் காரணம்

இம்மாதத்தில் மட்டுமே சவரனுக்கு ரூ.4,760 உயர்ந்துள்ளது

Feb 1, 2025 - 11:32
 1

உச்சத்தை தொட்ட தங்கம் விலை – வரலாறு காணாத உயர்வுக்கு இதுதான் காரணம்

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவரன் ரூ.62 ஆயிரத்தை நெருங்கியதால் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை உச்சம் தொட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டுமே சவரனுக்கு ரூ.4,760 உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை கடந்த 22ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையாது. அன்று முதல் தங்கம் விலை பவுன் ரூ.60 ஆயிரத்துக்கு கீழ் குறையவில்லை. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,280 வரை உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.680ம், வியாழக்கிழமை ரூ.120ம் உயர்ந்து ரூ.60,880க்கு விற்பனையாகி வந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை யாரும் எதிர்பாராத அளவில் ஒரு பவுனுக்கு ரூ. 960 ஒரேநாளில் அதிரடியாக உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

நேற்று ஒரு கிராம் ரூ.7730க்கும், ஒரு சவரன் ரூ.61,840க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்பனையாகிறது. இம்மாதத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,760 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்க பெடரல் வங்கி, தனது வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று அறிவித்துள்ளது. அதேநேரத்தில் டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தைக் கொண்டு வர முயற்சித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதும் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்த காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த நகர்வுகளால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. உள்நாட்டைப் பொருத்தவரை திருமண சீசன் என்பதால் நகை வாங்கும் தேவை அதிகரித்துள்ளதன் காரணத்தாலும் விலை ஏறியுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.