சட்டப்பேரவை சர்ச்சைக்கு வேல்முருகன் விளக்கம்!
எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

சட்டப்பேரவை சர்ச்சைக்கு வேல்முருகன் விளக்கம்!
வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதாக முதலவர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் பேரவையில் நடந்தது குறித்து வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை, என்னை பேசவும் விடவில்லை எனவும், எனக்கு பேச வாய்ப்பு கேட்டுதான் நான் என் இருக்கையை விட்டு எழுந்து வந்தேன் இது எப்படி வரம்பு மீறிய செயல் ஆகும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார், அவர் கூறியதை வைத்து முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அதே வார்த்தையை பயன்படுத்தி என்னை பேசுவது எனக்கு வருத்தமளிக்கிறது. கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் பாடமொழி, பயிற்சிமொழி தமிழாக இருக்க வேண்டும் என சொன்னார். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஒரு சட்டத்தையே தமிழ்நாட்டில் ஒரு துறை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது.
இதை நான் கண்டுபிடித்து மூத்த வழக்கரிஞர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்கள் லண்டனில் சென்றா வேலை கேட்க முடியும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சொன்னார்கள்.
இந்த உத்தரவை வரவைத்து அதை நடைமுறைப்படுத்தியவன் இந்த வேல் முருகன் தான் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் இருக்கக் கூடிய சிபிஎஸ்சி, சிபிஎஸ், ஐசிஎஃப், ஐபி உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் தெலுங்கு கட்டாய மொழியாக உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் எந்த பள்ளிக்கூடங்களிலும் தமிழுக்கு முக்கியத்துவமே இல்லை . இது குறித்து பேசுகையில் பேரவையில் என்னை பேசவிடாமல் தடுக்கின்றனர் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.