ரஜினிகாந்த் வெளியிட்ட ஆடியோ… ஜெயலலிதாவை நான் எதிர்த்த காரணம் இதுதான்!

ஆர்.எம்.வீரப்பன் ரியல் கிங் மேக்கர் – ரஜினிகாந்த்

Apr 9, 2025 - 16:39
 13
ரஜினிகாந்த் வெளியிட்ட ஆடியோ…  ஜெயலலிதாவை நான் எதிர்த்த காரணம் இதுதான்!

ரஜினிகாந்த் வெளியிட்ட ஆடியோ…

ஜெயலலிதாவை நான் எதிர்த்த காரணம் இதுதான்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தான் குரல் கொடுத்ததற்கான முக்கியமான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

திரைப்பட தயாரிப்பாளர், மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் என பல்வேறு அடையாளங்களுடன் வாழ்ந்து, கடந்த ஆண்டு மறைந்தவர் ஆர்.எம்.வீரப்பன்.

அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று ஏப்.9 ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி உள்ளது.

அதில் ஆர்.எம்.வீரப்பன் குறித்து தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக ஆர்.எம்.வீ குறித்து ரஜினிகாந்த் பேசியது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம், சோ, ஆர்.எம்.வீ ஆகியோர் தான் என்னிடம் நெருக்கமாக அன்பை பொழிந்தவர்கள். இவர்கள் எல்லாம் இல்லை என்று சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது.

பாட்ஷா படவிழாவில், ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பாளராக மேடையில் இருந்தார் வெடி குண்டு கலாசாரத்தை பற்றி நான் பேசினேன்.

அப்போது, அவர் அதிமுகவில் அமைச்சராக இருந்தார் அவரை வைத்துக்கொண்டே அதை பற்றி பேசியிருக்கக்கூடாது ஆனால் அப்போது எனக்கு அந்தளவுக்கு தெளிவு இல்லை.

விழா முடிந்த சிறிது நேரத்தில், ’நீங்க மேடையில் இருக்கும்போது எப்படி ரஜினி அப்படி பேச முடியும்என்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டார்.

ஆர்.எம்.வீரப்பனுக்கு என்னால் தான் பதவி போனது என நினைத்து எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

எனவே விடிந்ததும் அவருக்கு கால் பண்ணி மன்னிப்பு கேட்டேன் ஆனால் அவர் எதுவுமே நடக்காததுபோல், அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள், பதவிதானே போனது அதையெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என சாதாரணமாக சொன்னார்.  

ஆனால், அது தழும்பு போல என்னைவிட்டு போகவில்லை, போகாது ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது.

ஆர்.எம்.வீரப்பன் உண்மையிலேயே பெரிய மனிதர் அவர் ரியல் கிங் மேக்கர் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.