குமரி அனந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் குறிப்பு

தகைசால் தமிழர் விருது

Apr 9, 2025 - 18:11
 6
குமரி அனந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் குறிப்பு

குமரி அனந்தனுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் குறிப்பு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநில தலைவருமான குமரி அனந்தன் நேற்று (ஏப்ரல் 8) இரவு காலமானார் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள குமரி அனந்தன் மகளும் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் நேரில் வந்து குமரி அனந்தன் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர். குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குமரி அனந்தன் மறைவுக்கு தலைவர்கள் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்,

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்கு வாழ்ந்திட்ட அவரது பெருவாழ்வைப் போற்றி, அவருக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டுதகைசால் தமிழர்விருது வழங்கி பெருமை கொண்டோம்.

விடுதலை நாள் விழாவில் அந்த விருதினை நான் வழங்கியபோது, என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு வாஞ்சையோடு உறவாடிய அவரது நினைவு என் கண்களில் கண்ணீரைப் பெருக்குகிறது. ஏராளமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளையும் கண்ட அவரது தமிழால் நம் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என ஆறுதல் கொள்கிறேன்.

தகைசால் தமிழர்அய்யா குமரி அனந்தன் அவர்களது மறைவால் வாடும் அருமை சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள், காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்கள், அரசியல் மற்றும் இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த சொந்தங்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

பாசமிகு தந்தையாரை இழந்து சொல்லொண்ணா துயரில் வாடும் அன்புச் சகோதரி தமிழிசை அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த குமரி அனந்தன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை:

தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தமது இளமைக்காலம் முதல் தொண்டால் பொழுதளந்த மிகச்சிறந்த காந்தியவாதியான குமரி அனந்தன், தமது இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஓய்வின்றி உழைத்தவர்.

அவரது மறைவு ஈடுசெய்யவே முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி அனந்தன் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சி ஒரு வாரம் துக்கம் கடைபிடிப்பதோடு கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்:

இவர்கள் சிறுத்துப் போவார்கள் என்றெண்ணி ஆதிக்க சக்திகள் இவர்களை அடக்கி ஒடுக்கினார்கள். ஆனால், இவர்களோ சிறுத்துப் போகவில்லை. மாறாக, சிறுத்தையானார்கள்என்று எம்மை ஊக்கப்படுத்தியவர்.

தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர். அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி, காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:

தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசை அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

தவெக தலைவர் விஜய்:

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.