இடியாப்ப சிக்கலில் ஈரான்…. மீண்டும் மன்னராட்சி?
ஊசலாடும் ஈரான்
இடியாப்ப சிக்கலில் ஈரான்…. மீண்டும் மன்னராட்சி?
மேற்காசிய நாடான ஈரானில், தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் மக்களின் எழுச்சிப் போராட்டங்கள், உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆட்சியின் ஆணிவேரையே அசைத்து பார்த்துவிட்டது.
அத்தியாவசிய பொருட்களின் விலை பெரும் உச்சத்தை எட்டியுள்ளதால், அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மதத் தலைவர் ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற முழக்கம் ஒலித்து வரும் நிலையில், 1979ம் ஆண்டுக்கு முன்பிருந்த மன்னராட்சியையே மக்கள் விரும்புகின்றனர்.
ஈரானில் 2500 ஆண்டுகளாக மன்னராட்சியே நடைபெற்று வந்தது. கடைசியாக மன்னர் முகமது ரெசா ஷா பஹல்வி ஆட்சி நடந்தது. அவரது தீவிர அமெரிக்க ஆதரவு மத குருமார்களுக்கு பிடிக்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக நடந்த மக்களின் கிளர்ச்சி 2500 ஆண்டுகால மன்னராட்சிக்கு முடிவு கட்டியது.
பின்னர் 1979ம் ஆண்டு முல்லா எனப்படும் மதத் தலைவர் ஆட்சி அங்கு மலர்ந்தது.
தற்போது அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் மதத் தலைவர் கமேனி ஆட்சியை சீர்குலைக்க விரும்பிய அமெரிக்கா, மறைமுகமாக ஈரானில் கிளர்ச்சியை தூண்டியது. போராட்டத்திற்காக உதவிகளையும் வழங்கி வருவதால், மக்கள் கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியுள்ளது.
நாளுக்கு நாள் ஈரானில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், போராட்டம் தொடர்ந்தால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று மிரட்டியிருந்தார் டிரம்ப்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஈரானில் தற்போது புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
37 ஆண்டுகால கமேனியின் ஆட்சிக்கு முடிவு கட்டவும், ஆட்சி அதிகாரத்திற்கு வரவும் பட்டத்து இளவரசர் முகமது ரெசா ஷா பஹல்வி முனைப்புகாட்டி வருகிறார்… அமெரிக்காவில் 17 வயதில் தஞ்சம் புகுந்த அவர், ஈரானை வலுப்படுத்த, நவீனப்படுத்த 47 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்ப உள்ளதாகவும் கூறி வருகிறார்..
ஈரானில் ஷா ஆட்சி திரும்புவது இந்தியாவுக்கு கெட்ட செய்தியாக பார்க்கப்படுகிறது. ஈரானில் உள்ள மதத் தலைவர் ஆட்சி மீது இந்தியாவுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், மீண்டும் ஷா ஆட்சி ஏற்படுவதிலும் இந்தியாவுக்கு விருப்பமில்லை என்றே சொல்லப்படுகிறது.
ஈரான் பட்டத்து இளவரசர் ரெசா பஹல்வி, தனது தலைமையின் கீழ், ஜனநாயக ஈரானிய அரசு அமையும் என்றும் கூறியிருக்கிறார்… குறிப்பாக புதிய அரசு இந்தியாவுடன் நெருக்கமான உறவை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா – ஈரான் இடையேயான நீண்டகால உறவு, கலாச்சார ரீதியிலானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உலகளாவிய சவால்களை சமாளிப்பதில் இந்திய ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாகவும், எரிசக்தி பற்றாக்குறை, மக்கள் தொகை பெருக்கம், நீர் பற்றாக்குறை போன்றவற்றில் இந்தியாவின் தொழில்நுட்பம் நமக்கு உதவும் என்றும் விவரித்துள்ளார்.
மேலும் இருநாடுகளும் வணிக ரீதியாகவும், அறிவியல் தொழில்நுட்ப ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரானில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம் இந்தியாவில் சிக்கலான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்றே கூறப்படுகிறது.. பஹல்வியின் அரச குடும்பம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது.
1965 மற்றும் 1971ம் ஆண்டு போர்களில் பாகிஸ்தானுக்கு உதவிய ஷா, பாகிஸ்தானின் காஷ்மீர் பற்றிய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கரம் கரம் நீட்டியது… மீண்டும் பஹல்வி ஆட்சி திரும்புவது, டெஹ்ரானை பாகிஸ்தான் சார்பு நிலைப்பாட்டை நோக்கி நகர்த்துவதோடு, புது டில்லி மற்றும் பிராந்திய உறவுகளை சிக்கலாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் கூடிய ஆட்சி அதிகாரத்திற்குள் அரச குடும்பம் நுழைவது, பிராந்திய ஸ்திரமின்மைக்கு வழிவகுப்பதோடு, அமெரிக்கா-ஈரான்-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தி, இந்தியாவுக்கு சவால் அளிக்கக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஈரானின் ஆட்சி மாற்றம், வாக்குறுதி மற்றும் ஆபத்தின் சிக்கலான கலவையாக பார்க்கப்படுகிறது… வர்த்தகம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வலுவான இருதரப்பு உறவுகளுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், சபாஹர் அணுகல் முதல் பிராந்திய சீரமைப்புகள் வரையிலான அபாயங்களை புறக்கணிக்க முடியாது.
ஈரானின் அரசியல் எதிர்காலம் ஊசலாட்டத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் ராஜதந்திரத்திற்கான நீண்டகால தாக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து செயல்படுவது அவசியம் என்பது ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
