உலக கோப்பையை வெல்லுமா இந்தியா...

Jun 29, 2024 - 22:02
Sep 9, 2024 - 22:42
 10
உலக கோப்பையை வெல்லுமா இந்தியா...

பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பேட்டிங், பவுலிங் என இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மழையால் ஆட்டம் பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜூன் 2ம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உட்பட 20 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் அரங்கேறின. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சிக் கொடுத்தன. அதேபோல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா ஆகிய  அணிகள் சூப்பர் 8 சுற்றில் அடியெடுத்து வைத்தன

முக்கியமாக முதன்முறையாக கிரிக்கெட் தொடரை நடத்திய அமெரிக்கா, லீக் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தியதோடு சூப்பர் 8 வரை முன்னேறியது. அதேபோல், சூப்பர் 8-ல் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஆப்கன் அணி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றதும் கிரிக்கெட் ரசிகர்களை வியக்க வைத்தது. ஆனாலும் தென்னாப்பிரிக்காவுடனான அரையிறுதியில் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியை தழுவியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு பக்கம் அனைவரும் எதிர்பார்த்தபடியே, ஆரம்பம் முதலே அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணி பைனலுக்குச் சென்றது.  

இதனையடுத்து இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகள் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தத் தொடர் முழுவதும் தாங்கள் ஆடிய ஆட்டங்களில், இரண்டு அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி ஃபார்மில் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா சரியான நேரங்களில் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு பலம் சேர்க்கிறார். இதுவரை 7 போட்டிகளில் ஆடிய ரோஹித் ஷர்மா மொத்தம் 248 ரன்கள் எடுத்துள்ளார். ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் பேட்டிங்கில் இந்திய அணிக்கு பலமாக இருந்தாலும், ஷிவம் துபே, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இருவரும் அவுட் ஆஃப் ஃபார்மில் உள்ளனர்

அதேபோல், பந்துவீச்சில் இந்திய அணிக்கு பும்ரா, அர்ஷ்தீப் சிங் கூட்டணி நம்பிக்கை அளிக்கிறது. முக்கியமாக பும்ராவின் துல்லியமான தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் எதிர் அணி வீரர்கள் சரண்டர் ஆவது பைனலிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம். இந்த உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ராவும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் இருவரும் சுழற் பந்துவீச்சில் தென்னாப்பிக்கா அணிக்கு டஃப் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேநேரம் தென்னாப்பிரிக்க அணியில் ஓப்பனர் டி காக், டேவிட் மில்லர், கிளாஸ்ஸன், ஸ்டப்ஸ், மார்க்ரம் ஆகியோர் அதிரடி பேட்டிங் ஆட உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரையில் நார்ட்ஜே, ரபடா, ஷம்ஸி ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சிக்கலாக இருப்பார்கள் என உறுதியாக சொல்லலாம்.

இதுவரை இந்திய அணி பல இறுதிப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதால், பதட்டமில்லாமல் சரியான திட்டமிடலுடன் களமிறங்கும். ஆனால், பைனலில் அதிகம் விளையாடிய அனுபவமின்மையால் தென்னாப்பிரிக்கா அணி பதட்டமாகவே இந்தியாவை எதிர்கொள்ளும். அதனடிப்படையில் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்