ப்ரஜ்வல் விவகாரத்தை மன்னிக்க முடியாது! எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்!
கர்நாடகா பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரத்தில் அமித்ஷா மன்னிக்க மாட்டோம் எனக்கூறினார். இதற்கு கர்நாடாக முதல்வர் சித்தராமையா திடீரென்று நன்றி கூறி எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது எனக்கூறி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக இருக்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் சிட்டிங் எம்பியாக பாஜக கூட்டணியில் மீண்டும் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ம் தேதி ஹாசன் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் ஓட்டளித்த பிறகு பிரஜ்வல் ஜெர்மனி சென்றார். அவரது ஆபாச வீடியோக்கள் பரவிய நிலையில் அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த விவகாரம் குறித்து கர்நாடகா அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பணிப்பெண் வழங்கிய பாலியல் புகாரில் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது ஹோலேநரசிப்புரா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்ஐடி இருவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளது. மேலும் பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ விவகாரம் இந்தியா முழுவதம் பேசும் பொருளாகி உள்ளது. அதோடு எதிர்க்கட்சியினர் ஜேடிஎஸ் மற்றும் கூட்டணியில் உள்ள பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛‛பெண்களுக்கு எதிரான செயலில் ஈடுபடும் நபர்களை பாஜக பொறுத்து கொள்ளாது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இல்லை. இதனால் குற்றம்சுமர்த்தப்பட்ட நபர் மீது கர்நாடகா அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இதுதொடர்பாக சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: அமித்ஷா அவர்களே கடைசியாக பிரஜ்வல் ரேவண்ணா விஷயத்தில் கோபத்தை வெளிக்காட்டியதற்கு நன்றி. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கூட்டணி கட்சியினர் செய்தாலும் பொறுத்து கொள்ளமாட்டாம் என கூறியுள்ளீர்கள். இதனால் உங்களை நம்ப நினைக்கின்றனர். ஆனால் முந்தைய காலங்களில் உங்களின் செயல்பாடு மற்றும் நடத்தை என்பது ரொம்ப மலிவானதாக இருந்தது. ஒலிம்பிக்கில் சாதித்த பெண்கள் உங்களின் எம்பியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறக்க முடியுமா? அப்போது யார் பக்கம் நின்றீர்கள்? நீங்கள் எம்பியின் பக்கம் நின்றதோடு, டெல்லி சாலைகளில் வாரக்கணக்கில் மல்யுத் த வீரர்களை போராட வைத்தீர்கள்.
பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததும், அவர்களுக்கு உங்களின் கட்சியின் மாலை அணிவித்த வரவேற்றதையும் மறக்க முடியுமா?
18 வயது நிரம்பாத மைனர் தலித் சிறுமி பலாத்காரம் செய்த கொலை செய்யப்பட்ட உன்னாவ் வழக்கில் குற்றவாளிகளுக்கு பின்னால் உங்களின் கட்சி நின்றதை மறக்க முடியுமா?. ஹத்ராஸ் வழக்கில் பலாத்கார குற்றவாளிகளை உங்கள் கட்சி எப்படி பாதுகாத்தது என்பதை மறக்க முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றபோது பாஜக கண்மூடிக்கொண்டதை மறக்க முடியுமா?
நாட்டின் பெண்களுக்கு உண்மை என்னவென்று தெரியும். நீங்கள் எதார்த்ததத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது'' என விமர்சனம் செய்துள்ளார்.