நாய் வளர்ப்போருக்கு தமிழக அரசு உத்தரவு!
சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதால் நாய் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே பல்துறை நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 23 வகையான நாய் இனங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதில், பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் புல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 23 வகை நாய்களும் மிகவும் ஆக்ரோஷமானவை என்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவற்றின் கலப்பினங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆபத்தான நாய்களை வளர்ப்போர் பொது இடங்களுக்கு கூட்டிச் செல்லும்போது கட்டாயமாக இணைப்புச் சங்கிலி, நாய்க்கு முகக்கவசம் அணிய வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.