பரபரப்பில் செந்தில்பாலாஜி! தீவிரம் எடுக்கும் விசாரணை!

Apr 29, 2024 - 19:32
 11
பரபரப்பில் செந்தில்பாலாஜி! தீவிரம் எடுக்கும் விசாரணை!

செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

தற்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதன் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜி விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்க கூடிய அபாயம் உள்ளது. வழக்கின் விசாரணையிலும் முட்டுக்கட்டை போடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்க கூடாது.. என்ற பல்வேறு விஷயங்களை மனுவில் அமலாகக்த்துறை கூறியுள்ளது.

செந்தில் பாலாஜி கடந்த காலங்களில் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்றார் என்பதையும் அமலாகக்துறை தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இன்று பரபரப்பான வாதங்கள் நடைபெறும் என்று தெரிகிறது. அதில், அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும், செந்தில்பாஜாஜிக்கு ஜாமீன் சாத்தியமா, என்ன தீர்ப்பு வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.