கொலைக் குற்றங்களை குறைப்பதில் திமுக தொடர் தோல்வி..! - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

Aug 7, 2024 - 23:10
Sep 9, 2024 - 20:32
 4
கொலைக் குற்றங்களை குறைப்பதில் திமுக தொடர் தோல்வி..! - எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று முன்தினம் நெல்லை மேலப்பாளையத்தில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடந்திவரும் சையது தமீம் என்பவரை அவரின் கடைக்குள் வைத்தே மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மக்கள் அடர்த்தி நிறைந்த, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதோடு, சையது தமீம் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பையும்,  குடும்பத்தினரின் நிலையை கருத்தில்கொண்டு ரூ.50 லட்சம் இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சர்வ சாதாரணமாக நடைபெறும் இதுபோன்ற கொலைச் சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குள்ளாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தருமபுரியில் உணவக ஊழியர் முகமது ஆசிப் உணவத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை சமூக மக்களின் பாதுகாவலன் என இந்த அரசு கூறிக்கொண்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அவர்கள் கொலைச் செய்யப்படுவதன் மூலம் இந்த அரசு பாராமுகமாகவே இருக்கிறது என்பது தெரிகிறது. சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாக இந்த அரசு இருக்கிறது. 

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி மாதம் தொடங்கி 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் வழ.ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் கொலைகளும் இதில் அடங்கும்.

ஒவ்வொரு கொலைக் குற்றமும் நடந்த பிறகு விரைவாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவதாக தெரிவித்தாலும், குற்றம் நடப்பதற்கு முன்னரே குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதில் காவல்துறை தோல்வி அடைந்திருப்பதையே நடக்கும் நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

உ.பி., பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைப் போல தமிழகத்தில் குற்றச் செயல்களை மேற்கொள்ளும் கூலிப்படையினர்  அதிகரித்துள்ளது கவலை அளிக்கின்றது. ஒருபுறம் போதைக் கும்பலால் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில் மறுபுறம் கூலிப்படையினரால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதேப்போல் ஆணவக் கொலைகளும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்துவதில் திமுக அரசும், காவல்துறையும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.

ஆகவே, அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும், காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும், தமிழக அரசும், காவல்துறையும் சட்டம்-ஒழுங்கை காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கொலைக்களமாக மாறிவரும் தமிழ்நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.