திருப்பதியில் பெருமாள் இருப்பதன் காரணம்! பெருமாள் குபேரனிடம் பெற்ற கடனின் வரலாறு! 

Aug 12, 2024 - 23:27
Aug 12, 2024 - 23:35
 20
திருப்பதியில் பெருமாள் இருப்பதன் காரணம்! பெருமாள் குபேரனிடம் பெற்ற கடனின் வரலாறு! 

திருப்பதியில் பெருமாள் இருப்பதன் காரணம்! பெருமாள் குபேரனிடம் பெற்ற கடனின் வரலாறு! 


உலகிலேயே அதிக வருமானம் வரக்கூடிய கோவில் திருப்பதி ஏழுமலையான் கோவில்! ஏனென்றால் அந்தக் கோவிலில் தான் பக்தர்கள் வருடம் முழுவதும் உண்டியலில் பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்! அப்படிப்பட்ட பணக்கார கடவுளே கடனை அடைக்க முடியாமல் திருப்பதி மலை மேல் நின்று கொண்டிருக்கிறார்! அவரின் கடனை அடைப்பதற்காக தான் வருடம் முழுவதும் பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட திருப்பதியின் வரலாற்றை பார்ப்போம்! 

திருப்பதியின் வரலாறு! 

கிருஷ்ணாவதாரத்தை முடித்துவிட்டு பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது பூலோகத்தில் கலியுகம் தொடங்கி அநியாயங்கள் நடந்து கொண்டிருந்தது. உடனே திரும்பவும் இறைவன் பூமியில் அவதாரம் செய்ய வேண்டும் என்று காஷ்யப முனிவர் தலைமையில் முனிவர்கள் தியாகம் நடத்தினார்கள். அப்பொழுது அந்த யாகத்தை பார்க்க வந்த நாரதர், யாகத்தின் பலனை யாருக்கு தரப்போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அந்த முனிவர்களும் சாந்தமான மூர்த்திக்கு தான் அந்த பலனை தர போகிறோம் என்று சொல்லி, மும்மூர்த்திகளில் சாந்தமானவரை தேடி பிருகு முனிவர் வைகுண்டத்துக்கு சென்றிருக்கிறார். அப்பொழுது திருமால் ( பெருமாள்) பிருகு முனிவரை கண்டுகொள்ளாமல் இருந்ததால், கோபமான முனிவர் பெருமாளுடைய மார்பில் உதைத்து விட்டார். ஆனால் பெருமாள் கோபப்படாமல் அவருடைய காலை தடவி கொடுத்துள்ளார். இதை பார்த்து மிகுந்த கோபமான லட்சுமி அவரை தண்டிக்க சொல்லி பெருமாளிடம் கேட்டுள்ளார். ஆனால், திருமால் அதனை மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் கோபித்துக் கொண்டு லட்சுமி பூலோகத்துக்கு சென்று விட்டார். உடனே திருமாலும் லட்சுமியை தேடி பூலோகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வகுளாதேவி உடைய ஆசிரமத்தில் அவருடைய மகனாக சீனிவாச பெருமாள் என்ற பெயரில் இருந்துள்ளார். அப்பொழுது ஆகாச ராஜனுடைய மகளாக அவதரித்த பத்மாவதியை சீனிவாச பெருமாள் காதலித்து திருமணம் செய்யும் நேரம் வந்துள்ளது. அந்தக் காலத்தில் மணமகன் வீட்டிலிருந்து பெண்ணிற்கு நகை போட வேண்டும். ஆனால் திருமால் வைகுண்டத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்த காரணத்தால் அவரிடம் எந்த பணமும் இல்லை. அப்பொழுதுதான் குபேரனிடமிருந்து திருமணத்திற்காக ஆயிரம் வராகன் பொன்னை கடனாக பெற்றுள்ளார். மேலும் குபேரனிடமிருந்து கடன் பெற்றதற்கு பெருமாளே அவருடைய கைப்பட தங்கப்பட்டைய தகடில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தான்  பெற்ற கடனை கலியுகம் முடிவதற்குள் அதன் வட்டியை கட்டி முடிப்பதாகவும், முழு கடன் முடியும் வரை திருமலையிலேயே தங்கியிருப்பதாகவும்  குபேரனிடம் பெருமாள் வாக்களித்துள்ளார். அதனால்தான் அவருடைய கடனை அடைப்பதற்காக தற்பொழுது வரை பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கைகளை செலுத்தி வருகிறார்கள். 

குபேரனிடம் பெற்ற கடன் முடிவடைந்ததா?

பெருமாள் குபேரனிடம் பெற்ற கடன் முடிவடைந்ததா என்று கேட்டால், அது எப்பொழுதோ முடிந்து விட்டதாம். ஆனால் குபேரனுக்கு பெருமாள் கொடுத்த வாக்குப்படி அவருடைய கடன் முடிந்தால் பெருமாள் திருமலையை விட்டு வைகுண்டம் சென்று விடுவார். இதனால் பெருமாள் எழுதிக் கொடுத்த பட்டயத்தை தனியாக எடுத்து வைத்து விட்டு தற்பொழுது வரை குபேரனிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி  வருவதாக சொல்கிறார்கள். 

பெருமாள் குபேரனுக்கு எழுதிக் கொடுத்த தங்கப் பட்டயம்!

பெருமாள் குபேரனிடம் கடன் பெற்றதற்காக அவர் எழுதிக் கொடுத்த தங்கப்பட்டயத்தை பாதுகாத்து வருகின்றனர். அவர் குபேரனிடம் கடன் பெற்றதற்கு இதுவே சாட்சியாகும். அந்த தங்கப்பட்டயத்தை தரிசித்தால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்தாலும் சரி ஆகிவிடும் என்று மக்கள் நம்பி வருகின்றனர்.