ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்!

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் துவக்க நடவடிக்கை

Oct 24, 2024 - 17:34
 11
ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்!

ரேஷன் கடைகளில் வங்கி சேவைகள்!

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் துவக்க நடவடிக்கை

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கி, வங்கி சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
 
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை வளர்ப்பு கடன் உள்ளிட்ட பலவகை கடன்கள் வழங்கப்படுகின்றன. 2023ல் 18.36 லட்சம் விவசாயிகளுக்கு 15,500 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
 
விவசாய உறுப்பினர்களின் சராசரி வயது 50 என்பதால், அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் கார்டுதாரர்களுக்கு பல்வேறு துறைகளின் நலத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவைகள் மக்களை சென்றடையும் வகையில், அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அனைத்து ரேஷன் கடைகளிலும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு வினியோகிக்கவும், ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.