யார் யார்லாம் அனுமன் ஜெயந்தி கொண்டாடனும்…எப்படி வழிபடனும்…?
அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் ஆகியவை படித்து அனுமனை வழிபடுவது சிறப்பு
யார் யார்லாம் அனுமன் ஜெயந்தி கொண்டாடனும்..…எப்படி வழிபடனும்…?
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், அமாவாசை, மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.
ஆஞ்சநேயர் பிறந்தநாளான இன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடமாலை சாற்றி சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னை அஷோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நாமங்கள் பாடி அர்ச்சனைகளோடு வழிபட்டு சென்றனர்.
தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மிக முக்கியமாக அனுமன் ஜெயந்தி அன்று அனுமன் சாலிசா, சுந்தரகாண்டம் ஆகியவை படித்து அனுமனை வழிபடுவது சிறப்பு என கூறப்படுகிறது.
அனுமன் ஜெயந்தியை எப்படி கொண்டாட வேண்டும், யார் யார் எப்படியான வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டுமென்றால்,
வெற்றி கிடைக்க வேண்டும் என்பவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் துளசி மாலை சாற்றி வழிபடலாம். கிரக தோஷங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் வடை மாலை சாற்றி வழிபடலாம். எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் கரைந்து போக வேண்டும் என நினைப்பவர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடலாம். அனுமன் ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள அனுமன் படத்திற்கு துளசி சாற்றி, முடிந்தால் வடை மாலை சாற்றி வழிபடுவது நல்லது எனவும் கூறப்படுகிறது.
காலை 6 மணி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் அனுமன் ஜெயந்தி வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு. முடியாதவர்கள் மாலையில் அனுமனை வழிபடலாம்.
அதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணிக்கு துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது. டிசம்பர் 30ம் தேதி அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் இரண்டும் இணைந்து வருவதால் இந்த நாள் முழுவதுமே அனுமன் ஜெயந்தி வழிபாட்டிற்கு சிறந்ததாகும்.