37 நாட்களை எட்டியுள்ள உண்ணாவிரத போராட்டம் – நீதிபதி குழுவை சந்திக்க மறுக்கும் விவசாயிகள்
விவசாயிகளின் முக்கிய பிரச்னைகள் மீது அக்கறையில்லை
37 நாட்களை எட்டியுள்ள உண்ணாவிரத போராட்டம் – நீதிபதி குழுவை சந்திக்க மறுக்கும் விவசாயிகள்
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயத்திற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவ.,26ம் தேதி முதல் விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது, அவரது உண்ணாவிரதப் போராட்டம் 37 நாட்களை எட்டியுள்ள நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலைமையிலான குழுவினரை சந்திக்க சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சங்க விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தக் கமிட்டிக்கு விவசாயிகளின் முக்கிய பிரச்னைகள் மீது அக்கறையில்லை. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிராக்டர்கள், குடில்களை அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கானௌரி எல்லையில் விவசாயிகள் சார்பில் கிஷான் மஹாபஞ்சாயத்து எனும் பெயரில் பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு பொதுமக்கள் திரள வேண்டும் என்றும், விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவால் உரையாற்ற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.