விசாரணையில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியது ஏன்?

எதற்காக இரவு நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது?

Mar 25, 2025 - 18:11
 3
விசாரணையில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியது ஏன்?

விசாரணையில் இருந்து நீதிபதிகள் திடீரென விலகியது ஏன்?

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு திடீரென விலகியுள்ளனர்.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இதனை தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய இந்த சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டுமெனவும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது எனவும் தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு, “அமலாக்கத்துறையால் பெண்கள் உள்பட டாஸ்மாக் ஊழியர்கள் ஏன் சிறைபிடிக்கப்பட்டார்கள்? எதற்காக இரவு நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது?

சோதனை நடத்தும்போது சிசிடிவி காட்சிகள் பதிவுசெய்யப்பட்டதா?” என பல்வேறான கேள்விகளை எழுப்பி இன்றைக்குள் (மார்ச் 25) அமலாக்கத்துறை பதிலளிக்கவும்,

அதுவரை அமலாக்கத்துறை இந்த வழக்கில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து தாங்கள் இருவருமே விலகுவதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு இந்த வழக்கை தலைமை நீதிபதி மாற்றியுள்ளார்.

மேலும், புதிய நீதிபதிகள் அமர்வு நாளை (மார்ச் 26) டாஸ்மாக் வழக்கை விசாரிக்க உள்ளனர்.