அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறது எஸ்.டி.பி.ஐ
அதிமுக தங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறது எஸ்.டி.பி.ஐ
அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபுபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் நிர்பந்தம் காரணமாக அதிமுக அவர்களுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதிமுக தங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக, பாஜக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. அதிமுக மட்டுமல்ல, பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அந்த கூட்டணியில் எஸ்டிபிஐ அங்கம் வகிக்காது.
பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னார். தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பது தான் பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது வழியே இல்லாமல் திராவிட கட்சிகள் மீது குதிரை சவாரி செய்கிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த மாநில கட்சிகள் அழிந்து போனதாக தான் வரலாறு இருக்கிறது. அந்த வரிசையில் தமிழகம் ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறதா? அதனால், அதிமுக தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வரவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் அதிமுக, பாஜக கூட்டணி உறுதியான நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய அவர், “வக்ஃப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் வாக்களித்ததற்காக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தேன்” என்றார்.