கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்; தேமுதிக அடுத்த நகர்வு என்ன?
கூட்டணிக்கு அழிவு காலம் வந்துவிட்டது
கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்; தேமுதிக அடுத்த நகர்வு என்ன?
அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் நெருங்கி விட்டதாக கடுமையாக சாடியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
கடலூரில் வரும் 9ம் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வரும் நிலையில் கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இது ஒரு புறம் இருந்தாலும் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாகவும் சில விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே கூட்டணியை இறுதி செய்வதை தேமுதிமுக வழக்கமாக கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களும் வருகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டாக, 2011ம் ஆண்டில் தேர்தல் நாளுக்கு 1 மாதத்திற்கு முன்னர் தான் அதிமுகவுடனான கூட்டணியை தேமுதிக உறுதி செய்திருக்கிறது.
2016ல் மக்கள் நல கூட்டணியுடன் 1 ½ மாதத்திற்கு முன்புதான் கூட்டணியை இறுதி செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
அதனைத்தொடர்ந்து 2021ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கடைசி 20 நாட்களே இருந்த போது தான் அமமுகவுடன் கூட்டணியை இறுதி செய்து அறிவித்தது தேமுதிக.
அந்த வகையில் தற்போது 4 மாதங்களுக்கு முன்பே அதாவது ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்பேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது கொஞ்சம் வியப்பாக இருந்தாலும் இது அரசியல் முன்னேற்றம் அல்ல என்றும் அரசியல் தரப்பில் கருத்துகள் கூறப்படுகிறது.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு தேமுதிக சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் கட்சியின் அடுத்த 10 ஆண்டுகால எதிர்காலத்தையும் இருப்பையும் உறுதி செய்ய திமுக, அதிமுக, தவெக என அனைத்து வாய்ப்புகளையும் திறந்தே வைத்து நிதானமாக காய் நகர்ந்துகிறார் பிரேமலதா விஜயகாந்த்.
விறுவிறுப்பான அரசியல் களம் மத்தியிலும், தேமுதிக குறித்த விமர்சனங்களுக்கு மத்தியிலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் தரப்பில் கழக நிவாகிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
